சென்னை காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் டிரான்ஸ்பர்.. புது ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்தை அடுத்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக சென்னை பெருநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம் செய்யப்படுள்ளார்.

Jul 8, 2024 - 12:48
 0
சென்னை காவல்துறை ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் டிரான்ஸ்பர்.. புது ஆணையராக அருண் ஐபிஎஸ் நியமனம்
Arun IPS

சென்னை மாநகர காவல்துறை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ள அருண் 1998 ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இவர் சென்னை பல்கலைக்கழகத்தில் பி.இ மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பும், உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் காவல்துறை மேலாண்மை பிரிவில் பட்டய படிப்பும் படித்துள்ளார்.

ஐபிஎஸ் பயிற்சி முடித்த பிறகு நாங்குநேரி, தூத்துக்குடி ஆகிய உட்கோட்டங்களில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியாற்றினார். பின்னர் கரூர், கன்னியாகுமரி மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றினார் அருண்

துணை ஆணையராக சென்னை அண்ணா நகர் மற்றும் செய்ன்ட் தாமாஸ் மவுண்ட் ஆகிய இடங்களில் பணிபுரிந்துள்ளார் அருண் ஐபிஎஸ். மேலும் தமிழ்நாடு குற்ற புலனாய்வுத் துறையில் காவல் கண்காணிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். 2012 ஆம் ஆண்டு காவல்துறை துணைத் தலைவராக பதவி உயர்வு பெற்று திருச்சி சரக காவல் துணை தலைவராக பணியாற்றியுள்ளார் அருண்.

மேலும் சென்னை மாநகரில் போக்குவரத்து வடக்கு மண்டலம் மற்றும் சட்டம் - ஒழுங்கு தெற்கு மண்டலத்தின் இணை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார். 2016 ஆம் ஆண்டு காவல்துறை ஐஜியாக பதவி உயர்வு பெற்று திருச்சி மாநகர காவல் ஆணையராக பணியாற்றினார் அருண். தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறை கூடுதல் ஆணையராகவும் இருந்துள்ளார். இந்த நிலையில் சென்னை பெருநகர காவல் ஆணையராக அருண் ஐபிஎஸ் தற்போது நியமனம் செய்யப்படுள்ளார்.

பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சென்னையில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எதிர்கட்சியினர் குற்றம் சாட்டினர். இந்த நிலையில் சென்னை காவல்துறை ஆணையராக இருந்த சந்திப் ராய் ரத்தோர் காவலர் பயிற்சி பள்ளி டிஜிபியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow