“சாமி ஆடிய மாணவிகள்... சின்ன திரை பிரபலம் ராமர் உரை” மதுரை புத்தகக் கண்காட்சியில் அட்ராசிட்டி!
மதுரை புத்தகக் கண்காட்சியில் பள்ளி மாணவிகள் சாமி ஆடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதேபோல் இன்னொரு சம்பவமும் கடும் சர்ச்சையாகி உள்ளது.
மதுரை: தமிழகத்தில் மாவட்டந்தோறும் புத்தக் கண்காட்சிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் மதுரையில் நேற்று (செப்.6) புத்தக் கண்காட்சி தொடங்கியது. மதுரை மாவட்ட நிர்வாகமும் ப.பா.சி-யும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த புத்தகக் கண்காட்சி, வரும் 16ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 200-க்கும் மேற்பட்ட அரங்குகளில், முன்னணி பதிப்பகங்கள் தங்களது புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளனர்.
மதுரை புத்தகக் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல், எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. தினமும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நடைபெறும் இந்த புத்தகக் கண்காட்சியில், லட்சக்கணக்கான நூல்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நேற்று தொடங்கிய மதுரை புத்தகக் கண்காட்சியில், பள்ளி மாணவிகள் சாமி ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.
புத்தகக் கண்காட்சியை பார்வையிட சென்றிருந்த மாணவிகள், அங்கு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்த சாமி பாடலை கேட்டதும் ஆடத் தொடங்கினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், இதுகுறித்து பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். புத்தகக் கண்காட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது வியப்பாக உள்ளது என கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதேநேரம், இது ஒருவகையான மனவெழுச்சி உளவியல் தொடர்பானது எனவும், மதுரையில் இதுபோன்ற சம்பவங்கள் எல்லா இடங்களிலும் நடக்கும் என்றும் சிலர் விளக்கம் கொடுத்துள்ளனர்.
மாணவிகள் சாமி ஆடியதை விடவும், இன்னொரு சம்பவம் தான் தற்போது ஹைலைட்டாக உள்ளது. அதாவது மதுரை புத்தகக் கண்காட்சியில் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில், விஜய் டிவி புகழ் ராமர் உரையாற்ற உள்ளாராம். விஜய் தொலைக்காட்சியில் ஸ்டாண்டப் காமெடி உள்ளிட்ட கேம் ஷோக்களில் காமெடி செய்து பிரபலமானவர் ராமர். ஒருசில படங்களிலும் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். பெரும்பாலும் இவரது காமெடிகள் அனைத்தும் டபுள் மீனிங்கில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், புத்தகக் கண்காட்சியில் ராமர் உரையாற்றவிருப்பதும் வாசகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எழுத்தாளர்களும் வாசகர்களும் சமூக வலைத்தளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர். புத்தக திருவிழாவையாவது அரசு நடத்துகிறதா என கேள்வி எழுப்பியுள்ளனர். பொன்னியின் செல்வன் படத்தின் பாடல்களை எழுதிய இளங்கோ கிருஷ்ணன், ராமர் உரையாற்றவுள்ளதாக வைக்கப்பட்டுள்ள பேனரை தனது முகநூலில் ஷேர் செய்துள்ளார். மேலும், ”ரொம்ப பெருமையா இருக்குடா... அந்த ஊர்ல ஒரு எழுத்தாளர் தான் எம்பியாக உள்ளார். அங்கேயே இந்த லட்சணம்” என பதிவிட்டுள்ளார். அதேபோல், “புத்தக திருவிழாவில் "ஆத்தாடி என்ன உடம்பி.." மஹா விஷ்ணுவைத் தொடர்ந்து ஸ்ரீ ராமர்” எனவும் சிலர் விமர்சனம் செய்துள்ளனர்.
What's Your Reaction?