கள்ளச்சாராயம் குடிச்சவங்களுக்கே 10 லட்சம்... இவர் குடும்பத்துக்கு 25 லட்சம் கொடுங்க -கோபி நயினார்

''ராஜ்குமார் உயிரிழப்புக்கு காரணமான வட்டாட்சியர் பிரீத்தியை கைது செய்தனர். பிரீத்தியை இடமாற்றம் செய்தததால் தமிழ்நாடு அரசு அவரை பாதுகாக்கிறது என்பதுதான் அர்த்தம்''

Jul 8, 2024 - 12:57
Jul 8, 2024 - 13:08
 0
கள்ளச்சாராயம் குடிச்சவங்களுக்கே 10 லட்சம்... இவர் குடும்பத்துக்கு 25 லட்சம் கொடுங்க -கோபி நயினார்
கோபி நயினார்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே கோட்டக்கரையில் வசித்து வந்தவர் இளைஞர் ராஜ்குமார். இவரது வீடு அரசு நிலத்தில் இருப்பதாக கூறி கடந்த 4ம் தேதி வருவாய்த் துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் வீட்டை அகற்ற சென்றுள்ளனர். 

'தனது வீட்டை அகற்ற வேண்டாம்' என இளைஞர் ராஜ்குமார் அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதிகாரிகள் அதை ஏற்க மறுத்ததால், விரக்தி அடைந்த ராஜ்குமார் திடீரென பெட்ரோல் ஊற்றி உடலில் தீ வைத்துக் கொண்டார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்பு மேல் சிகிச்சைக்காக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

ராஜ்குமார் தீக்குளித்து ஓடி வந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் கவனக்குறைவாக செயல்பட்டதாக கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் பிரீத்தி, எளாவூர் வருவாய் ஆய்வாளர் கோமதி, தேர்வழி வி.ஏ.ஓ. பாக்கிய ஷர்மா ஆகிய 3 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையே  கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ராஜ்குமார், நேற்று  சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில், ராஜ்குமாரின் உயிரிழப்புக்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மனைவி நிவேதா, 'அறம்' திரைப்பட இயக்குநர் கோபி நயினார் கும்மிடிப்பூண்டி காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்தனர்.

30 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த பட்டா நிலத்தை ஆக்கிரமிப்பு எனக்கூறி இடிக்க முயன்றதால் ராஜ்குமார் மனவேதனை அடைந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும்  வட்டாட்சியர் பிரீத்தியை கைது செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய இயக்குநர் கோபி நயினார், ''ராஜ்குமார் உயிரிழப்புக்கு காரணமான வட்டாட்சியர் பிரீத்தியை கைது செய்தனர். பிரீத்தியை இடமாற்றம் செய்தததால் தமிழ்நாடு அரசு அவரை பாதுகாக்கிறது என்பதுதான் அர்த்தம். வேறு இடத்துக்கு சென்றாலும் அவர் இதே மாதிரிதான் செயல்படுவார். ஆகவே பிரீத்தியை கைது செய்ய வேண்டும். அவர்மீது துறைரீதியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வட்டாட்சியர் பிரீத்திக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். ராஜ்குமார் குடும்பத்துக்கு அரசு ரூ.25 லட்சம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் வழங்குகிறது. ஆகவே தனது நிலத்துக்காக போராடி உயிரிழந்த ராஜ்குமார் குடும்பத்துக்கு அரசு ரூ.25 லட்சம் வழங்க வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

இதேபோல் நெட்டின்சன்கள் பலரும், ''கள்ளச்சாராய மரணங்களுக்கே அரசு ரூ.10 லட்சம் கொடுக்கிறது. அதிகாரிகளின் அலட்சியத்தால் இறப்பவர்களின் குடும்பத்துக்கு அரசு அதிக இழப்பீடு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow