ஹத்ராஸ் துயரத்தை அரசியலாக்க விரும்பவில்லை.. ஆறுதல் கூற நேரில் சென்ற ராகுல்காந்தி கருத்து

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரை ராகுல்காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நான் இதை அரசியலாக்க விரும்பவில்லை; பாதிக்கப்பட்ட அனைவரும் அடித்தட்டு விளிம்புநிலை மக்கள் என்பதால் அதிக இழப்பீடும் தொகையும் மேலும் அதனை விரைவில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Jul 5, 2024 - 11:16
 0
ஹத்ராஸ் துயரத்தை அரசியலாக்க விரும்பவில்லை.. ஆறுதல் கூற நேரில் சென்ற ராகுல்காந்தி கருத்து
rahul gandhi meets families of hathras

உத்தரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் கடந்த 2 ஆம் தேதி நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர். அப்போது ஏற்பட்ட திடீர் கூட்டநெரிசலில் சிக்கி 120க்கும் மேற்பட்டோர் பலியாயினர். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் உயிரிழந்தது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 'முக்கிய சேவதர்' தேவ் பிரகாஷ் மதுகர் முக்கிய குற்றவாளி என எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் மார்பகத்தில் ஏற்பட்ட அதிக அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே மத்திய பிரதேசத்தின் குவாலியர் டிக்ரா சாலையில் உள்ள சாமியாரின் ஆசிரமத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.இதேபோல் ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் போலே பாபாவுக்கு ஆசிரமங்கள் உள்ளன. இங்குள்ள ஆசிரமங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டபோது, இந்த நிகழ்ச்சிக்காக 80 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதும், ஆனால் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் திரண்டதால் இந்த விபத்து ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் மக்கள் பாதிக்கப்பட்டபோது, அங்கிருந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இதனை கண்டுகொள்ளாமல் இருந்துள்ளதாக அங்கு சென்றவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் பலர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இதற்கு முக்கிய காரணியாக விளங்கும் சாமியார் போலே பாபா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வருகின்றனர். அதோடு போலே பாபா தற்போது தலைமைறைவாகவும் உள்ளார். இந்த நிகழ்வு குறித்து அவர் எந்த ஒரு வீடியோவும் விளக்கமும் வெளியிடவில்லை.


இந்நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராகுல் காந்தி முதலில் அலிகாரில் உள்ள பிலக்னா கிராமத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.ராகுல் காந்தியின் வருகையை முன்னிட்டு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சந்தித்து, ஆறுதல் தெரிவித்த ராகுல் காந்தி நீதி கிடைப்பதற்கு உறுதுணையாக இருப்பதாக வாக்களித்தார்.நான் இதை  அரசியலாக்க விரும்பவில்லை என்று கூறிய ராகுல் காந்தி,  பாதிக்கப்பட்ட அனைவரும் அடித்தட்டு விளிம்புநிலை மக்கள் என்பதால் அதிக இழப்பீடும் தொகையும் மேலும் அதனை விரைவில் வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow