கரூரில் காலையிலேயே சிபிசிஐடி ரெய்டு.. எம் ஆர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டில் சிக்கியது என்ன?

கரூரில் முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டில் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையின் முடிவில் மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ் வீட்டில் இருந்து ஆவணங்கள் சிலவற்றை சிபிசிஐடி போலீசார் எடுத்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Jul 5, 2024 - 11:52
Jul 5, 2024 - 12:15
 0
கரூரில் காலையிலேயே சிபிசிஐடி ரெய்டு.. எம் ஆர் விஜயபாஸ்கர் ஆதரவாளர்கள் வீட்டில் சிக்கியது என்ன?
MR Vijayabaskar Supporters CBCID RAID

கரூர் மாவட்டம், வாங்கல் குப்பிச்சிபாளையத்தை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது ஆதரவாளர்கள் மூலமாக போலி ஆவணங்களை வைத்து, மோசடியாக எழுதி பெற்றதாக புகார் உள்ளது. இது குறித்து கரூர் மாவட்டம், வாங்கல் காவல் நிலையத்தில் பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கானது சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் தனிப்படை குழு அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்த நிலையில் ஏற்கனவே கரூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன் ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மீண்டும் இரண்டாவதாக இடைக்கால முன்ஜாமின் கேட்டு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது.

இந்த நிலையில் இன்று காலை 8  மணி முதல் கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான பெட்ரோல் பங்கு பணிபுரிந்து வந்த  யுவராஜ் மணல்மேடு உள்ள அவரது வீட்டில், சிபிசிஐடி இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான 4 போலீசார் கரூர் மாவட்ட காவல்துறையை சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் வேலாயுதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள செல்வராஜ் செங்கல் சூளை, கவுண்டம்பாளையம் பகுதியில் அமைந்துள்ள  ஈஸ்வரமூர்த்தி ஆகியோரது வீட்டிலும் சிபிசிஐடி போலீசார் சோதனையில் ஈடுபட்டு  மேற்கண்ட  இடங்களிலும், சொத்து மோசடி வழக்கு குறித்து திருச்சி,நாமக்கல்,சேலம் மாவட்டங்களைச் சார்ந்த சிபிசிஐடி இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் பத்திருக்கும் மேற்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். 

இதில் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற சோதனையின் முடிவில் மணல்மேடு பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஊழியர் யுவராஜ் வீட்டில் இருந்து ஆவணங்கள் சிலவற்றை சிபிசிஐடி போலீசார் எடுத்துச் சென்றனர். 

வேலாயுதம்பாளையம் பகுதியில் அதிமுக  எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் செல்வராஜூக்கு சொந்தமான செங்கல் சூளை மற்றும் கவுண்டம்புதூர் பகுதியில் உள்ள ஈஸ்வரமூர்த்தி வீட்டிலும் நடைபெற்ற சிபிசிஐடி சோதனை நிறைவடைந்துள்ளது. கரூரில் அனைத்து இடங்களிலும் சோதனை நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow