உங்கள் உடல் வாதமா? பித்தமா? கபமா? - எப்படிக் கண்டறிவது? 

வாதம், பித்தம், கபம் என்றால் என்ன? நமது உடல் எந்த வகை என்பதை நாம் எப்படிக் கண்டறியலாம்?

Sep 7, 2024 - 00:53
 0
உங்கள் உடல் வாதமா? பித்தமா? கபமா? - எப்படிக் கண்டறிவது? 
vadham pitham kabham

நமது பாரம்பரிய மருத்துவங்களான சித்த மருத்துவமும், ஆயுர்வேதமும் மனித உடலின் தன்மையைப் பொறுத்து வாதம், பித்தம், கபம் என மூன்றாகப் பிரிக்கிறது. ஒவ்வொன்றுக்குமான இயல்புக்கு ஏற்ப அவர்களது உடலின் தன்மை இருக்கிறது. நம்முடைய உடல் வாதமா, பித்தமா, கபமா என்பதை எப்படிக் கண்டறிவது? என்றும் ஒவ்வொன்றின் தன்மை குறித்தும் விளக்குகிறார் ஆயுர்வேத மருத்துவர் கௌதமன் கிருஷ்ணமூர்த்தி... 

“நமது மருத்துவ முறைப்படி உடலை 5 வகையாக பிரிக்கிறோம். வாதம், பித்தம், கபம் இவைதான் அடிப்படை. வாத பித்தம், வாத கபம், பித்த கபம் என இவற்றில் ஏதேனும் ஒரு சேர்க்கை நான்காவது, வாதம், பித்தம், கபம் மூன்றும் சேர்ந்த தன்மை ஐந்தாவது. ஆக இப்படியாக உடலை ஐந்தாக வகைப்படுத்துகிறோம். 

உடலின் அடிப்படையான திசுக்களின் வளர்ச்சி மற்றும் அதன் இயக்கமேல் வாதம் ஆகும். அதனை நாம் உயிர்சக்தி என்றும் சொல்லலாம். உயிரை உருவாக்குகிற உயிரணுவும் வாதம்தான், கருமுட்டையும் வாதம்தான். வாதம்தான் திசுக்களை வளர்க்கிறது. இதற்கான ஆற்றல் எங்கிருந்து கிடைக்கும் என்றால் அது பித்தத்தில் இருந்து உருவாகுகிறது. வாதமும் பித்தமும் சேர்ந்து உருவாக்குகிற தயாரிப்புதான் கபம். நமது உடல் அமைப்பு என்பது கபத்தால் உருவாக்கப்படுவது. இப்படியாகப் பார்த்தால் வாதம், பித்தம், கபம் இல்லாத அணுவே நம் உடலில் இல்லை என்று சொல்லலாம். 

நமது தோலை எடுத்துக் கொள்வோம். தோலின் நிறம் என்பது வாதம், அந்தத் தோல் வறட்சியாக இருக்கிறதா, பிசுபிசுப்பாக இருக்கிறதா என்கிற அதன் தன்மை பித்தம், தோலின் திசுக்கள் கபம். இப்படையாக இம்மூன்றும் ஒன்றோடொன்று ஒத்திசைவாக இருக்கும். வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றிலும் 5 வகைகள் இருக்கின்றன. இவையெல்லாம் சேர்ந்ததுதான் நமது உடல். இம்மூன்றில் எது ஒன்று கூடுதலாக இருக்கிறதோ நாம் அந்த வகையான உடல் என்று கொள்ளலாம். நமது உடல் வாதமா? பித்தமா? கபமா? என்று எப்படிக் கண்டறிவது என்று கேட்டால் நமது உருவ அமைப்பு, உடல் செயல்பாடு, மன அமைப்பு, கழிவு நீக்கம், வாழ்வியல் செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாக வைத்துதான் கண்டறிய முடியும்.  

வாத உடம்புக்காரர்கள் சராசரி உயரத்தில் இருப்பார்கள், கருமையாகவும், அடர் கருமையாகவும் இருப்பார்கள். மூன்று வேளையும் பிரியாணியாக சாப்பிட்டாலும் கூட அவர்கள் உடல் எடை கூட மாட்டார்கள். அவர்களுக்கு தலைமுடியின் அடர்த்தி குறைவாகவே இருக்கும். உணவைப் பொறுத்தவரை ஒரு நாள் பசியே இருக்காது, இன்னொரு நாள் ஆறு வேளை சாப்பிடுவார்கள். இப்படியாக மாறி மாறி அவர்கள் உணவு உட்கொள்வார்கள். அவர்களது தோல் வறட்சியாக இருக்கும். மலச்சிக்கல் அவர்களுக்கு இயல்பாக இருக்கும். குடல் மற்றும் வயிறு சார்ந்த பிரச்னைகள் அவர்களுக்கு அதிகம் இருக்கும். தூக்கமின்மையால் அவதிப்படுவார்கள். இவையெல்லாம்தான் வாத உடலின் தன்மை.  

அடர் கருப்பாக இருப்பவர்கள் எல்லோரும் பித்த உடல்காரர்கள். ஆப்பிரிக்க கண்டம் முழுவதும் பித்த உடல்தான். பித்த உடம்புக்காரர்களுக்கு வியர்வை அதிகம் சுரக்கும். தோல் நோய்கள் அதிகமாக ஏற்படும். அவர்களது செரிமான மண்டலம் மிக உறுதியாக இருக்கும். கல்லைச் சாப்பிட்டாலும் செரிக்கும் என்று சொல்வார்களே அது போல. சில உணவுகள் அவர்களுக்கு ஒத்து வராது என்பதால் அவற்றையெல்லாம் தவிர்ப்பார்கள். சராசரியான எடை கொண்டதாக அவர்களது உடல் அமைப்பு இருக்கும். வாத உடல் போன்று மெலிந்திருக்க மாட்டார்கள். உடல் பெருத்தும் இல்லாமல் இரண்டுக்கும் மத்தியில் இருப்பார்கள். புளிப்பை உணவில் சேர்த்துக் கொண்டே இருப்பார்கள். எல்லாமே பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என பித்த உடம்புக்காரர்கள் நினைப்பார்கள். போராட்ட குணம் மிகுந்தவர்களாகவும் அதி புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். கலைத்துறையில் சாதித்த பலரும் பித்த உடல்தான். உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமென்றால் நடிகர் கமல்ஹாசனைச் சொல்லலாம். பித்த உடம்புக்காரர்களுக்கு ஆயுள் அதிகம். 

கப உடம்புக்காரர்களை சோம்பேறிகள் என்றே சொல்வோம். அவர்கள் பிறக்கும்போதே அதிக எடையுடன் தான் பிறப்பார்கள். நாம் பார்க்கும் பொலிவு மிகுதியாக இருப்பவர்கள் பெரும்பாலும் கப உடம்புக்காரர்களாகத்தான் இருப்பர். அவர்களுக்கு முடி உதிர்வே இருக்காது, முடி ஒவ்வொன்றுக்கு கம்பி போன்று வலுவாக இருக்கும். கோவில் சிலைகளில் நாம் பார்க்கும் வாளிப்பான உடல் அமைப்பு கபத்துக்கான உடல் அமைப்பு. கப உடம்புக்காரர்கள் உடல் நல்ல வடிவாக இருக்கும். அளவான உணவு எடுத்துக் கொள்வார்கள், இவர்களால் ஒரு நொடி கூட பசி தாங்க முடியாது. இவர்களுக்கு தலைமைத்துவப் பண்பு மிகுதியாக இருக்கும். 

இப்படியாக வாத, பித்த, கபத்தைக் கொண்டு உடல் மற்றும் மன அமைப்பு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியும். நோயற்ற வாழ்வுக்காக மட்டுமல்ல நமது உடலை நாம் அறிந்தால் நமது மொத்த வாழ்க்கையையுமே வளமானதாக மாற்ற முடியும். வாத உடம்புக்காரர்கள் பொறியாளருக்குப் படித்தால் அத்துறையில் வெல்வார்கள், கப உடம்புக்காரர்கள் மருத்துவத்துக்குப் படித்தால் அத்துறையில் வெல்வார்கள் என்றெல்லாம் கணக்கு இருக்கிறது. உங்கள் குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச் சென்று நாடி பிடித்துப் பார்த்து எந்த வகையான உடல் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்றபடி உங்கள் சரியான துறையில் பயணிக்க வைத்தால் மிகப்பெரிய வெற்றியடையலாம்” என்கிறார் கௌதமன் கிருஷ்ணமூர்த்தி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow