Durai Vaiko : மூத்த குடிமக்கள், செய்தியாளர்களுக்கு ரயில் கட்டண சலுகை.. துரை வைகோ கோரிக்கை

Durai Vaiko Speech At Parliament : திருச்சி தொகுதியில் தஞ்சாவூரிலிருந்து மதுரை வரை கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை வழியாக புதிய இரயில்வே பாதையை அமைப்பது என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை இந்த பட்ஜெட்டிலும், முந்தைய பட்ஜெட்களிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது என்று துரை வைகோ கூறியுள்ளார்.

Aug 1, 2024 - 14:03
Aug 2, 2024 - 10:20
 0
Durai Vaiko : மூத்த குடிமக்கள், செய்தியாளர்களுக்கு ரயில் கட்டண சலுகை.. துரை வைகோ கோரிக்கை
Durai Vaiko Speech At Parliament

Durai Vaiko Speech At Parliament : மூத்த குடிமக்கள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பத்திரிகை ஊடகங்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்பட்டது. ஆனால், கோவிட் 19 லாக்டவுன் அறிவித்தபிறகு அந்தக் கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. தற்போது வரை மூத்த குடிமக்கள் மற்றும் ஊடகத்துறையினர் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டன சலுகை திரும்பி வழங்கப்படவில்லை என்று துரை வைகோ(Durai Vaiko) கூறியுள்ளார்.


ரயில்வே மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில்  பேசிய துரை வைகோ, 

நமது ஜனநாயகத்தின் நான்காவது தூணிற்கு (பத்திரிகை மற்றும் ஊடகங்கள்) உறுதுணையாக இருக்க வேண்டிய கடமை கொள்கை வகுப்பாளர்களாகிய நமக்கு உள்ளது. இருப்பினும், கோவிட் 19 லாக்டவுன் முன்பு வரை மூத்த குடிமக்கள் மற்றும் அரசாங்க அங்கீகாரம் பெற்ற பத்திரிகை ஊடகங்களுக்கு ரயில் கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை வழங்கப்பட்டது. ஆனால், கோவிட் 19 லாக்டவுன் அறிவித்தபிறகு அந்தக் கட்டண சலுகை நிறுத்தப்பட்டது. தற்போது வரை மூத்த குடிமக்கள் மற்றும் ஊடகத்துறையினர் பலமுறை கோரிக்கை வைத்தும் கண்டன சலுகை திரும்பி வழங்கப்படவில்லை.

எனவே, அரசு அங்கீகரிக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு 50% பயணச்சீட்டு சலுகையை மீண்டும் வழங்குமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களை கேட்டுக்கொள்கிறேன். மேலும், 2020 மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கிற்கு முன்பு மாணவர் சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட சலுகையோடான மாதாந்திர சீட்டுகளையும் மீண்டும் வழங்க வேண்டும்.

 திருச்சி தொகுதியில் தஞ்சாவூரிலிருந்து மதுரை வரை கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை வழியாக புதிய இரயில்வே பாதையை அமைப்பது என்பது நீண்ட நாள் கோரிக்கையாகும். இந்த கோரிக்கை இந்த பட்ஜெட்டிலும், முந்தைய பட்ஜெட்களிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. இந்த இரயில்வே பாதை 2012-13 ஆம் ஆண்டு ஆய்வு செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது, மேலும் 2018-19 இரயில்வே பிங்க் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இரயில்வே பாதையை விரைவில் நிறைவேற்ற தேவையான நிதியை வழங்கி, தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாண்புமிகு அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். 

இந்த புதிய இரயில்வே பாதை புதுக்கோட்டை மற்றும் கந்தர்வக்கோட்டை போன்ற பின்தங்கிய பகுதிகளின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய ஊக்கமாக இருக்கும். இது மதுரை மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் தொழிற்துறை வளர்ச்சியையும் மேம்படுத்தும். இது தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மதுரை ஆகிய இடங்களில் கோவில் சுற்றுலாவிற்கு முக்கிய உத்வேகமாக அமையும்.

ஐயா, ரயில்வே துறையால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 2023-24 ஆம் ஆண்டு ரயில்வேயின் பிங்க் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள புதுக்கோட்டை நகரின் லெவல் கிராசிங் 376 இல் உள்ள ரயில்வே மேம்பாலத்தை விரைவில் செயல்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். புதுக்கோட்டை சிப்காட் அருகே உள்ள கருவேப்பலான் கேட் பகுதி ரயில்வே மேம்பால திட்டத்தை செயல்படுத்தப்படுவதற்கு ஏற்ற பகுதி என, ரயில்வே துறை ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். இந்த கருவேப்பலான் கேட் பகுதி ரயில்வே மேம்பாலத்திற்கு விரைவில் ஒப்புதல் அளித்து, அதை முடிக்க தேவையான நிதியை வழங்க வேண்டும்.

மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான திரு.செல்வகணபதி அவர்கள் முன்னரே எடுத்துரைத்தபடி, தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு முன்னரே ஒப்புதல் அளிக்கப்பட்ட 7-க்கும் மேற்பட்ட புதிய ரயில் பாதை திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமல் உள்ளது. மேலும் நடப்பு பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபாய் 6362 கோடி ரூபாய் என்பது நீண்ட காலமாக நிலுவையில் உள்ள புதிய ரயில் பாதை திட்டங்களை விரைவில் முடிக்க போதுமானதாக இல்லை. ஆனால், மத்திய பிரதேசத்திற்கு 14,738 கோடியும், மகாராஷ்டிராவிற்கு 15,940 கோடியும், உத்தரபிரதேசத்திற்கு 19,848 கோடியும் ஒதுக்கியிருப்பது ஒன்றிய அரசின் தமிழ்நாட்டின் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையை தெளிவாக காட்டுகிறது. 

ஐயா, தமிழக மக்கள் பாஜக கூட்டணிக்கு ஒரு இடத்தைக் கூட வழங்காததால்தான் தமிழகத்தின் மீது இவ்வளவு அலட்சியப்போக்கை மத்திய அரசு காட்டுகிறதா? பாஜக கூட்டணிக்கு வாக்களிக்கத் தவறினால் ஒன்றிய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு எந்த உதவியும் கிடைக்காது என பாஜக கூட்டணியின் முக்கியத் தலைவர் திரு. அன்புமணி ராமதாஸ் அவர்கள் பொதுவெளியில் கூறியிருப்பதால் இந்தக் கேள்வியை முன்வைக்கிறேன். 

இறுதியாக, தமிழகத்தில் உள்ள எங்களது மக்களின் நலன்களுக்கு பாதகம் விளைவிக்கக் கூடாது என்றும், நிதி அல்லது திட்டங்களின் அடிப்படையில் தமிழகத்திற்கு நியாயமான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் துரை வைகோ.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow