புத்தகக் கண்காட்சியில் சாமி ஆடிய மாணவிகள்.. அமைச்சர் மூர்த்தி பரபரப்பு விளக்கம்!

''மாமதுரை என்பது எல்லா சமுதாயமும் எல்லோரும் இருக்கக்கூடியது. நமது திராவிட மாடலும் அதற்குள் அடங்கும். நானும் மாவட்ட ஆட்சியரும் பிரமாதமாக புத்தக கண்காட்சியை நடத்தினோம் என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்'' என்று அமைச்சர் மூர்த்தி கூறியுள்ளார்.

Sep 7, 2024 - 18:41
 0
புத்தகக் கண்காட்சியில் சாமி ஆடிய மாணவிகள்.. அமைச்சர் மூர்த்தி பரபரப்பு விளக்கம்!
Tamilnadu Minister Moorthy

மதுரை: மதுரை நகரில் தமுக்கம் மைதானத்தில் நேற்று முன்தினம்  (செப்.6) புத்தக் கண்காட்சி தொடங்கியது. இந்த கண்காட்சியை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட நிர்வாகமும் ப.பா.சி.யும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த புத்தகக் கண்காட்சி வரும் 16ம் தேதி வரை 10 நாட்கள் நடைபெறவுள்ளது. சுமார் 200க்கும் மேற்பட்ட அரங்குகளில், பல்வேறு முன்னணி பதிப்பகங்களின் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. 

தினமும் மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை இந்த புத்தகக் கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகக் கண்காட்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. எழுத்தாளர்கள், பட்டிமன்றப் பேச்சாளர்கள் பங்கேற்கும் சிந்தனை அரங்கம் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 

முன்னதாக, மதுரை மக்களின் எதிர்பார்ப்புக்கு இடையே நேற்று முன்தினம் புத்தகக் கண்காட்சி தொடங்கிய நிலையில், அங்கு சாமி பாடல்கள் ஒலிபரப்பப்பட்டன. அப்போது அந்த பாட்டுக்கு பள்ளி மாணவிகள் சாமி ஆடிய வீடியோ வைரலாக பரவியது. இது பல்வேறு தரப்பிலும் கடும் விமர்சனத்தை எழுப்பியது. ''புத்தக கண்காட்சி அரசு சார்பில் நடைபெறும் விழா. இதில் சாமி பாடல்களை ஒளிபரப்பியது ஏன்?'' என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

மாணவிகள் சாமி ஆடும் வீடியோவை பகிர்ந்த விசிக எம்.பி ரவிக்குமார், ''ஒரு பாட்டைக் கேட்டு மாணவிகள் சாமி ஆடுகிறார்களென்றால் அது நமது கல்வி முறையின் தோல்வியல்ல. நமது பண்பாட்டின் தோல்வி. கல்வி என்பது வகுப்பறைகளில் மட்டுமல்ல, வீடுகளிலும், வீதிகளிலும்கூடப் புகட்டப்படுகிறது. அங்கெல்லாம் மூடத்தனம் என்னும் நச்சுப் புகையைப் பரப்பிக்கொண்டு வகுப்பறையில் மட்டும் அறிவியல் என்னும் ஆக்ஸிஜனை செலுத்தினால்  நமது இளைய சமுதாயத்தைக் காப்பாற்றவே முடியாது. மூடப் பழக்கங்களைத் தடைசெய்யும் சட்டம் ஒன்றைத் தமிழ்நாடு அரசும் இயற்ற வேண்டும்'' என்று கூறினார்.

இதேபோல் மதுரை புத்தகக் கண்காட்சியில் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் டிவி புகழ் ராமர் உரையாற்ற உள்ளதும் சர்ச்சையை கிளப்பியது. புத்தக திருவிழாவில் பிரபல எழுத்தாளர்களை பேச வைக்காமல், இதுபோன்ற டிவி நடிகர்களை பேச வைப்பது ஏன்? என பலரும் கேள்வி எழுப்புகின்றனர். இந்நிலையில், அமைச்சர் மூர்த்தி மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது அவரிடம்  புத்தகக் கண்காட்சியில் மாணவிகள் சாமி ஆடியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அமைச்சர் மூர்த்தி, ''மதுரை புத்தக கண்காட்சி  கலை நிகழ்ச்சிகளில் கிராம பாடல்கள் தான் ஒளிபரப்பப்பட்டது. இதில் எந்த வித சாதி, சமயம் இல்லை. அதற்கு மதச்சாயம் பூச வேண்டாம், இது தொடர்பாக பத்திரிகை, தொலைக்காட்சி நண்பர்கள் தவறான தகவலை பரப்ப வேண்டாம்.

யாரோ ஒருவர் சொல்வதற்காக தவறான செய்திகளை சொல்லக்கூடாது. மதுரை அதற்கு அப்பாற்பட்டது. ஆர்வக்கோளாறில் பள்ளி மாணவிகள் ஆடியதை பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. மாமதுரை என்பது எல்லா சமுதாயமும் எல்லோரும் இருக்கக்கூடியது. நமது திராவிட மாடலும் அதற்குள் அடங்கும். நானும் மாவட்ட ஆட்சியரும் பிரமாதமாக புத்தக கண்காட்சியை நடத்தினோம் என்பது உங்கள் மனசாட்சிக்கு தெரியும்'' என்று தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow