கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது.. சசிகலாவிற்கு வாய்ப்பில்லை.. ஆர்.பி உதயகுமார் பொளேர்

RB Udhayakumar Criticise Sasikala : சசிகலா சுற்றுப்பயணம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வது போன்றது. அதிகாரம் கையில் இருந்தபோது சசிகலா தான் சார்ந்த சமூகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

Jul 18, 2024 - 13:45
Jul 19, 2024 - 10:05
 0
கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது.. சசிகலாவிற்கு வாய்ப்பில்லை.. ஆர்.பி உதயகுமார் பொளேர்
RB Udhayakumar Criticise Sasikala

RB Udhayakumar Criticise Sasikala : அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது என்று முன்னாள் அமைச்சரும் சட்டசபை எதிர்கட்சி துணைத்தலைவருமான ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார். அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது என்று ஆர்.பி.உதயகுமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு படுதோல்வியை சந்தித்து வரும் அதிமுக ஒன்றிணைந்தால் மட்டுமே 2026 சட்டசபை தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று கூறி வரும் சசிகலா தனது அரசியல் பயணத்தின் அடுத்த இன்னிங்ஸை தென்காசியில் இருந்து ஆரம்பித்து விட்டார்.  சசிகலாவிற்கும் அதிமுகவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி விட்டார். சசிகலாவை அதிமுகவில் மீண்டும் இணைக்க மாட்டோம் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும் கூறியுள்ளார்.

இந்த நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி உதயகுமார், அதிமுகவில் சசிகலாவுக்கு மீண்டும் இடம் கிடையாது. கறந்த பால் மடி புகாது, கருவாடு மீன் ஆகாது. சசிகலா சுற்றுப்பயணம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்வதுபோன்றது. அதிகாரம் கையில் இருந்தபோது சசிகலா தான் சார்ந்த சமூகத்துக்கு எதுவும் செய்யவில்லை என்று கூறினார்.

சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு என்ன செய்தார் என்பதை கூற முடியுமா?. தான் சார்ந்த சமூகத்துக்கு மட்டுமல்லாது அந்த சமூகத்தைச் சேர்ந்த அதிமுக 2ஆம் கட்ட தலைவர்களின் மோசமான நிலைக்கும் சசிகலாதான் காரணம். உள்ளடி வேலைகளின் காரணமாக அதிமுக ஆட்சியை இழந்தது. 

33 ஆண்டு காலம் ஜெயலலிதாவுடன் இருந்து ஆட்சி நிர்வாகத்தை கவனித்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுடன் இருந்து அதிமுக ஆட்சியை வழிநடத்தியதாகக் கூறிக் கொள்ளும் சசிகலா அவர் சார்ந்த சமூகத்தினருக்கு செய்த நன்மை என்ன?. தான் சார்ந்த பின்புலத்தை காட்டி சசிகலா தன்னைத்தான் வளர்த்துக் கொண்டாரே தவிர மக்களுக்கு எதுவும் செய்ததில்லை. 

சசிகலா தான் சார்ந்த சமூக மக்களுக்கு எதையும் செய்யவில்லை. சசிகலாவால் பயனடைந்தவர்கள் என்று யாராவது உள்ளார்களா?. சசிகலா செல்வது சுற்றுப்பயணம் அல்ல, சுற்றுலா பயணம். அதிமுகவினர் தற்போதுதான் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய தருணம் என்று கூறினார்.

ஜெயலலிதா மரணத்திற்குப் பிறகு கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் இறுதியில் ஓ.பன்னீர் செல்வம் முதல்வராக இருந்த போது, சின்னம்மா தலைமை ஏற்க வேண்டும் சசிகலாவிற்கு ஆதரவாக குரல் கொடுத்தவர் ஆர்.பி உதயகுமார். எதற்கெடுத்தாலும் சின்னம்மாதான் என்று சொன்ன ஆர்.பி உதயகுமார் இன்று சசிகலா மீண்டும் அதிமுகவிற்குள் வருவதற்கு எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow