முதலில் அருண் நேரு.. இப்போது மேயர் பிரியா.. திமுகவை உரசும் கார்த்தி சிதம்பரம்.. பொங்கும் உடன்பிறப்புகள்!

கார்த்தி சிதம்பரம் திமுகவை உரசுவது இது ஒன்றும் புதிது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கும், பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேருவுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் மோதலே உண்டானது.

Sep 1, 2024 - 16:34
Sep 2, 2024 - 10:09
 0
முதலில் அருண் நேரு.. இப்போது மேயர் பிரியா.. திமுகவை உரசும் கார்த்தி சிதம்பரம்.. பொங்கும் உடன்பிறப்புகள்!
Mayor Priya And Karthi Chidambaram

சென்னை: சென்னையில் கூவம் ஆற்றை சீரமைத்தல், கூவம் கரைகளில் உள்ள மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துதல் உள்ளிட்ட பணிகளுக்காக தமிழ்நாடு அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் இது தொடர்பாக எந்த பணிகளும் நடைபெறவில்லை என்று எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர். 

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய சென்னை மேயர் பிரியா, ''சென்னையில் கூவம் ஆற்றை நீர்வள ஆதாரத்துறையோடு இணைந்து ரூ.735 கோடி மதிப்பீட்டில் சென்னை மாநகராட்சி மறுசீரமைக்கிறது. கூவம் நதியை மீட்க தொழில்நுட்ப உதவி மற்றும் நிதியை வழங்க அமெரிக்க அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் சென்னை வந்தபோது இது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது'' என்றார்.

இந்நிலையில், கூவம் மறு சீரமைப்புத் திட்டங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று சென்னை மேயருக்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், ''கூவம் ஆறு கடந்த 10 ஆண்டுகளில் மிக மோசமாக மாசுபாடு அடைந்துள்ளது. கூவத்தை சீரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.750 கோடி ஒதுக்கீடு செய்த நிலையில்  ரூ.329 கோடி ஏற்கெனவே செலவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி கூட்டத்தில் பேசிய நீங்கள் (மேயர் பிரியா) கூவம் நதியை சீரமைப்பது குறித்து அமெரிக்கா அதிகாரிகளிடம் இருந்து தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வருவதால் உள்ளிட்ட பணிகளை குறிப்பிட்டீர்கள். ஆனாலும் கூவம் நதியை சீரமைப்பது குறித்து நீங்கள் அளித்த பதில்கள் தெளிவில்லாமல் உள்ளது. ஆகவே கூவத்தை சீரமைக்க இதுவரை மேற்கொண்ட திட்டங்கள், பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என்று கூறியுள்ளார்.

திமுக கூட்டணியில் உள்ள கார்த்தி சிதம்பரம் எதிர்க்கட்சிகளை போல் திமுகவை கேள்வி கேட்டுள்ளதால் அக்கட்சி நிர்வாகிகள் கடும் கொதிப்பில் உள்ளனர். ''கூவம் நதி சீரமைப்பு தொடர்பாக சென்னை மாநகராட்சி தெளிவான விளக்கம் அளித்துள்ளது. ஆனால் கார்த்தி சிதம்பரம் எதிர்க்கட்சியினர் போல் நடந்து கொள்வது சரியில்லை'' என்று திமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

கார்த்தி சிதம்பரம் திமுகவை உரசுவது இது ஒன்றும் புதிது அல்ல. இரண்டு நாட்களுக்கு முன்பு அவருக்கும், பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேருவுக்கும் இடையே சமூக வலைத்தளத்தில் பெரும் மோதலே உண்டானது. அதாவது  திருச்சியிலும் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், ஆரம்பக்கட்ட ரிப்போர்ட் அடிப்படையில் திருச்சி மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ரூ.11,000 கோடிக்கு மேல் செலவாகும் என்று 'சென்னை அப்டேட்ஸ்' எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தது.

இதற்கு பதில் அளித்த கார்த்தி சிதம்பரம், ''திருச்சிக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை. இதுபோன்ற நடக்காத திட்டங்களை கைவிட்டு விட்டு, அடிப்படை திட்டங்களில் கவனம் செலுத்த வேண்டும்'' என்று கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து கார்த்தி சிதம்பரத்துக்கு பதில் அளித்த பெரம்பலூர் திமுக எம்.பி அருண் நேரு, ''கார்த்தி. பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திருச்சியில் உள்ள 4 மாவட்டங்களும் உள்ளன. திருச்சியின் புறநகர் பகுதியில் இருந்து திருச்சி நகரை இணைக்கும் மெட்ரோ ரயில் திட்டத்தை பொதுமக்கள் வரவேற்க தயாராக உள்ளனர். இதன்மூலம் கல்லூரிகள், மருத்துவமனைகள், வேலைக்கு செல்பவர்கள் பயனடைவார்கள். திருச்சி தொடர்ந்து வளர்ந்து வருவதால் சாலை போக்குவரத்தை மட்டுமே வைத்து சமாளிக்க முடியாது. மெட்ரோ ரயில் தேவை'' என்று பதில் அளித்து இருந்தார்.

இதன்பிறகு ''சென்னை மெட்ரோவுக்கே ரூ.566 கோடி இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், 27 லட்சம் மக்கள் தொகையை கொண்ட திருச்சி நகரம் எப்படி மெட்ரோ சேவையை சமாளிக்கும்?'' என்று கார்த்தி சிதம்பரம் கூற, ''மெட்ரோ ரயில் திட்டங்கள் பணம் சம்பாதிக்க கொண்டு வரப்பட்டது அல்ல; மக்களின் தேவைக்காக கொண்டு வரப்படுகிறது'' என அவருக்கு அருண் நேரு பதிலடி கொடுக்க இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரே கூட்டணியில் உள்ள இரண்டு எம்.பி.க்கள் மோதிக் கொண்டதை திமுகவினர் ரசிக்கவில்லை. இதேபோல் காங்கிரஸ் கட்சியினர் சிலரும் இதை விரும்பவில்லை. கடந்த மாதம் காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய கார்த்தி சிதம்பரம், ''ஒவ்வொரு தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி கூட்டணியே வைத்துக் கொண்டிருந்தால் கட்சியின் பலம் தெரியாமல் போய் விடும். திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டதால் நமது வாக்கு வங்கி சரிந்துள்ளது. கட்சியை மறுசீரமைப்பு செய்ய வேண்டிய நேரம் இது. காங்கிரசுக்கு இருக்கும் வாக்கு வங்கியை தெரிந்து கொள்ள தேர்தலில் தனியாக போட்டியிடுவது கட்டாயம்'' என்று கூறியிருந்தார். 

''திமுக மற்றும் முதல்வர் ஸ்டாலினின் உதவி இல்லாமல் காங்கிரஸ் மற்றும் கார்த்தி சிதம்பரம் வெற்றி பெற்றிருக்க முடியாது. இந்த நன்றியை மறந்து அவர் பேசக்கூடாது'' என்று திமுகவினர் மட்டுமின்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் கண்டனம் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கார்த்தி சிதம்பரம் தொடர்ந்து திமுகவை உரசி வரும் நிலையில், இதற்கு காங்கிரஸ் தலைமை ஒரு முடிவு கட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow