மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகம் திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி ஒன்றிய கழகத்தின் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி தேவன்குறிச்சி அக்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் மாநில மாவட்ட ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
உறுப்பினர்கள் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சியில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார் கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு உறுப்பினர் அட்டை வழங்கினார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், “முல்லைப் பெரியாறு அணை குறித்து ஒரு மத்திய அமைச்சர், அணை உடைந்து விட்டால் கேரளா என்ன ஆகும் என்று கூறுகிறார்.
ஏற்கனவே முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என்று பாதுகாப்பு குழு வல்லுநர்கள் கூறியதை தொடர்ந்து உச்சநீதிமன்றம் கூட கூறியுள்ளது, முல்லைப் பெரியாறு அணை தென் மாவட்ட மக்களின் ஜீவாதார உரிமை. முல்லை பெரியார் அணை குறித்து முதலமைச்சர் வாய் திறக்காமல், மவுன சாமியாராக தான் உள்ளார் இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை?
இன்றைக்கு கருணாநிதிக்கு 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டு உள்ளார்கள். அது குறித்து எங்களுக்கு வருத்தம் இல்லை, ஆனால், அந்த விழாவிற்கு மத்திய அமைச்சர், இணையமைச்சர், அண்ணாமலை வருகிறார்கள். கருணாநிதிக்கு நாணயத்தை வெளியிட்டால் தமிழகத்தில் பாலாறும், தேனாறுமா ஒட போகிறது.
இன்றைக்கு திமுக இரட்டை வேடம் போட்டது வெட்டவெளிச்சமாக ஆகி உள்ளது. இன்றைக்கு 39 நாடாளுமன்றத்தில் வெற்றிபெற்ற பிறகு, மத்திய அரசை அழைத்து நாணயத்தை வெளியிடுகிறார்கள். என் அப்பாவிற்கு நாணயத்தை வெளியிட அமைச்சர் உள்ளே வாருங்கள், மத்திய அரசே உள்ளே வாருங்கள் என்று அழைக்கிறார் ஸ்டாலின்.
நிதி ஆயோக்கை கூட்டத்தை ஏன் ஸ்டாலின் புறக்கணித்தார்? ஆனால் கவர்னர் அளித்த தேநீர் விருந்தில் கலந்து கொண்டுள்ளார். ஏனென்றால் தனது தந்தையர் பெயரில் நாணயத்தை வெளியிட வேண்டும் என்றுதான் கலந்து கொண்டுள்ளார். அந்த நாணயத்தில் ஹிந்தி மொழி பொறிக்கப்பட்டுள்ளது. ஹிந்து ஒழிக என்று 75 ஆண்டுகள் முழக்கமிட்ட திமுகவின் குரல், இன்றைக்கு சமாதி ஆக்கப்பட்டுள்ளது.
இதே பிஜேபியை தான், திமுக பிரிவினைவாதிகள் என்றும், சங்கி என்றும் மாறி, மாறி கடுமையாக விமர்சித்தது. நாணயத்தை மட்டும் வெளியிட அழைக்கவில்லை. தனது மகன் உதயநிதியை முதலமைச்சராக ஆக்க வேண்டும், அதற்கு எந்த எதிர்ப்பும், வழக்கும் வந்து விடக்கூடாது என்பதற்காக தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை அழைத்து வந்தார்.
இன்றைக்கு திமுகவும், பாஜகவும் போட்ட இரட்டை வேடம் வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அதிமுக பாஜக அடிமை என்று எங்களை அடிமை, அடிமை என்று திமுக கூறியது. ஆனால் இன்றைக்கு பாஜகவின் வாழ்நாள் அடிமையாக திமுக உள்ளது என்று நிருபனமாகியுள்ளது
இன்றைக்கு சட்டமன்றத் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வெற்றி பெற்ற ஆணவத்தில், தலைக்கனத்துடன் திமுக இருந்து வருகிறது. 2011ஆம் ஆண்டில் அதிமுக இருக்காது சொன்னவர்கள் தற்போது மதுரையில் இல்லை” என்று கூறியுள்ளார்.