''பயப்படாதீங்க ரஜினி.. நான் உஷாராக இருப்பேன்''.. சூப்பர் ஸ்டாருக்கு உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்!

'''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் (மூத்த அமைச்சர்கள்) உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம். ஆனால் அதை ஸ்டாலின் சரியாக செய்கிறார்'' என்று ரஜினிகாந்த் பேசி இருந்தார்.

Aug 24, 2024 - 21:30
Aug 25, 2024 - 09:32
 0
''பயப்படாதீங்க ரஜினி.. நான் உஷாராக இருப்பேன்''.. சூப்பர் ஸ்டாருக்கு உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின்!
MK stalin And Rajinikanth

சென்னை: தமிழ்நாடு பொதுப்பணித் துறை அமைச்சர் எ. வ. வேலு, முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பெருமையை பறைசாற்றும் வகையில், 'கலைஞர் எனும் தாய்' என்னும் நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடந்தது. 

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த இந்த விழாவில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், துரை முருகன், தங்கம் தென்னரசு, மூர்த்தி, ராஜகண்ணப்பன், பழனிவேல் தியாகராஜன், மா.சுப்பிரமணியன், எம்.பி.க்கள் கனிமொழி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், கலாநிதி வீராசாமி, துரை வைகோ மற்றும் கே. பாலகிருஷ்ணன், முத்தரசன், திண்டுக்கல் ஐ.லியோனி, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக 'சூப்பர் ஸ்டார்' நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார்.  அமைச்சர் எ. வ. வேலு எழுதிய 'கலைஞர் எனும் தாய்' நூலை முதல்வர் ஸ்டாலின் வெளியிட ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். பின்பு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் கூறுகையில், ''எ.வ.வேலு எழுதிய  'கலைஞர் எனும் தாய்' என்னும் நூல் தலைப்பு மிகவும் பொருத்தமான தலைப்பு. இந்த சமூகத்துக்காவும், மண்ணுக்காகவும் போராடியவர் கலைஞர் கருணாநிதி. அவர் சந்தித்த சோதனைகள், வேதனைகள் வேறு யாராக இருந்தாலும் காணாமல் போயிருப்பார்கள். 

விமர்சனங்கள் தேவைதான். அது வேண்டும். ஆனால் விமர்சனம் மழை மாதிரி இருக்க வேண்டும். புயல் மாதிரி இருக்கக் கூடாது. விமர்சனம் செய்யுங்கள்; ஒருவருடைய மனதை நோகடிக்காதீர்கள்.  கருணாநிதி ஒரு மகான். அவருடைய புகழ் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்லும். கருணாநிதி குறித்து இன்னும் அதிக புத்தகங்கள் வெளிவர வேண்டும்.  அவர் குறித்து திரைப்படமே எடுக்க வேண்டும்'' என்றார்.

பின்பு சிறப்புரை ஆற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ''கலைஞர் கருணாநிதி எனக்கு தந்தை மட்டுமல்ல தாயாகவும் திகழ்ந்தார். என்னைபோல் திமுக உடன்பிறப்புகள் அனைவரையும் அரவணைத்து செல்லும் தாயாக கலைஞர் திகழ்ந்தார். பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களையும் அரவணைத்து சென்றவர் கருணாநிதி. 

கலைஞரின் தாயான அஞ்சுகம் அம்மா அவர்களை பற்றி தலைவர் கலைஞர் உருக்கமாக எழுதுவார். அதைவிட எம்.ஜி.ஆர் மற்றும் சிவாஜி இருவரும் அஞ்சுகம் அம்மையார் குறித்து உருக்கமாக பேசுவார்கள்.  'கலைஞர் எனும் தாய்' நூல் தலைப்பு அவருக்கு மிகவும் பொருத்தமாக உள்ளது. நான் மனதில் என்ன நினைக்கிறேனோ அதை கண் அசைவின் மூலம் உணர்ந்து செய்து முடிக்கின்ற ஆற்றல் எ.வ.வேலுவிற்கு உள்ளது என்று கலைஞர் சொல்வார். இன்று எனக்கும் அப்படித்தான் எ.வ.வேலு இருக்கிறார்.

கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் ஏறு தழுவுதல் அரங்கம், கலைஞர் கோட்டம் ஆகியவை எ.வ.வேலுவின் திறமைக்கு சாட்சியாக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் சிலை, சென்னையில் உள்ள கலைஞர் நினைவிடம் ஆகியவையும் எ.வ.வேலுவின் திறமைக்கு  தலையாய சான்று. 

இந்திய வரைபடத்தில் குறிப்பிடப்படாத திருக்குவளை என்னும் ஊரில் பிறந்த கலைஞருக்கு இந்திய அரசே நாணயம் வெளியிடுவது என்பதை விட நமக்கு வேறு என்ன பெருமை வேண்டும். கலைஞரின் புகழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது. இனம், மொழி, மாநிலம் காக்க நாம் ஓயாமல் உழைப்பதுதான் கலைஞருக்கு நாம் காட்டும் நன்றியாகும்'' என்று ஸ்டாலின் கூறினார்.

முன்னதாக விழாவில் பேசி இருந்த ரஜினி, ''பள்ளி ஆசிரியருக்கு பழைய மாணவர்களை சமாளிப்பது கஷ்டம். அதேபோல் திமுகவில் ஏராளமான பழைய மாணவர்கள் உள்ளனர். இந்த பழைய மாணவர்களை சமாளிப்பது மிகவும் கஷ்டம் (நான் முன்வரிசை அமைச்சர்களை பார்த்து சொல்லவில்லை). ஆனால் ஸ்டாலின் அதை சரியாக செய்து கொண்டிருக்கிறார். துரைமுருகன்னு ஒருத்தர் இருக்கிறார். கலைஞர் கண்ணிலேயே விரலைவிட்டு ஆட்டினவரு.  அவர் பேசுறது ஒன்னுமே புரியது. ஆனால் ஸ்டாலின் சார் Hats off to You'' என்று கூறி இருந்தார்.

ரஜினியின் இந்த பேச்சுக்கு மேடையிலேயே பதில் அளித்த முதல்வர் ஸ்டாலின், ''ரஜினிகாந்துக்கு என்னை விட ஒரு வயது அதிகம். ரஜினி எனக்கு அறிவுரை கூறினார். அவரது அறிவுரையை நான் ஏற்றுக் கொண்டேன். அதை புரிந்து கொண்டேன். பயப்பட வேண்டாம். எதையும் நான் தவற விட மாட்டேன். எல்லாவற்றிலும் உஷாராக இருப்பேன் என்ற உறுதியை ரஜினிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow