Health Story: Google-ஐ பார்த்து வைத்தியம்... No, its very Bad... எச்சரிக்கும் பிரபல மருத்துவர்!
தலைவலியோ, காய்ச்சலோ எதுவாக இருந்தாலும் இப்போதெல்லாம் நம்மவர்கள் முதலில் கூகிள் டாக்டரிடம் தான் வைத்தியம் பார்க்கச் செல்கிறார்கள். அவர் எந்தக் கட்டணமும் வசூலிப்பதில்லை தலைவலிக்கு என்ன தீர்வு என்று நாம் டைப் செய்து தேடினால் போதும் அவர் என்னென்ன காரணம் என்பதையும், அதற்கு என்ன மருந்து என்பதையும் சொல்லி விடுகிறார்.
சென்னை: மருந்தகத்துக்குச் சென்று அந்த மருந்தை கேட்டால் ப்ரிஸ்கிரிப்சனே இல்லாமல் கொடுத்துவிடுவார்கள். சிகிச்சை சுலபமாக முடிந்து விடுமல்லவா. அப்படியென்றால் இந்த பொதுநல மருத்துவர்கள் எல்லாம் இனி தேவையே இல்லைதானே. இப்படி நாம் நினைக்கிறோம் என்றால் நம்மை விட ஆகச்சிறந்த முட்டாள் வேறு எவரும் இருக்க மாட்டார்கள். கூகிள் பார்த்து வைத்தியம் செய்துகொள்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் மிக கவனமாக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் பவித்ரா விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார்.
“இன்றைக்கு எல்லோரது கையிலும் ஸ்மார்ட் போன் இருக்கிறது. இணைய வசதி இருப்பதால் எல்லாவற்றையும் கூகிளில் தட்டிப் பார்த்து தெரிந்துகொள்ள நினைக்கிறார்கள். உடல்நலப் பிரச்னைகளுக்கும் கூகிளை நாடிச்செல்லும் போக்கு சமீப காலங்களில் பெருகி வருகிறது. இதில் என்ன தவறு இருக்கிறது என நீங்கள் கேட்கலாம். கூகிள் பொய் சொல்கிறதா? என்றால் இல்லை. அங்கீகரிக்கப்பட்ட மருத்துவத் தகவல் வலைதளங்கள் இருக்கின்றன. அவை மருத்துவ அறிவியல் பூர்வமான கட்டுரைகளைத்தான் வெளியிடுகின்றன என்பதில் சந்தேகமே இல்லை. அப்படி இருந்தும் அதை நாடக்கூடாது என்று சொல்கிறோம். ஏனென்றால் மருத்துவத்தில் எல்லோருக்கும் எல்லாமும் பொதுவாக இருக்காது. ஒவ்வொருவரது உடல்நிலையைப் பொறுத்து அவர்களது உடல்நலப் பிரச்னைகளும் வேறுபட்டிருக்கும்.
கூகிள் என்பது தகவல்களை மட்டுமே தரும். நமது உடலை அது ஆராயாது என்பதால் பொதுவான தகவல்களை அடிப்படையாக வைத்து மட்டுமே சிகிச்சை எடுத்துக்கொள்ள முடியாது. இந்த அடிப்படையை நாம் அனைவரும் புரிந்துகொண்டாலே போதும். முன்பெல்லாம் காய்ச்சல் வந்தால் மருந்தகத்துக்குப் போய் பாரசிட்டமால் மாத்திரை அல்லது காய்ச்சலுக்கு மாத்திரை கொடுங்கள் என கேட்டு வாங்கிச் சாப்பிட்டார்கள். இப்போது அதற்கும் ஒருபடி மேலாக கூகிளில் தேடி ஆண்டி பயாடிக் மாத்திரைகளின் பெயர்களைக் கண்டறிந்து அதை வாங்கிச் சாப்பிடுகிறார்கள். இது மோசமான விளைவுகளை உண்டாக்கும். காய்ச்சல் ஏற்படுகிறது என்றால் அதற்கான காரணம் என்ன என்பதை அறிய வேண்டும்.
காய்ச்சல், தலைவலி உள்ளிட்டவை தனிப்பட்ட பிரச்னைகள் அல்ல. உடலின் மற்ற பிரச்னைகளுக்கான அறிகுறியாகவும் அவை வெளிப்படும். ஆக, அது அப்படியான காய்ச்சலா, வைரஸ் தொற்றால் உண்டானதா இல்லை பாக்டீரியாவால் ஏற்பட்டதா என்பதையெல்லாம் மருத்துவரை அணுகும்போதுதான் தெரியும். அவர் நமது அன்றாட நடவடிக்கைகளை கேட்டுத் தெரிந்துகொண்டும், பரிசோதித்தும் அது எந்தவிதமான காய்ச்சல் என்பதைக் கண்டறிவார். அந்தக் காய்ச்சலுக்கு எந்த மருந்தைக் கொடுக்க வேண்டும் என்பதையும் எந்த அளவு கொடுக்க வேண்டும் என்பதையும் அவர் முடிவு செய்வார். கூகிளைப் பார்த்து காய்ச்சலுக்கு ஆண்டி பயாடிக் எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அது வைரஸ் காய்ச்சலாக இருக்கும் நிலையில் எந்தப் பலனும் இருக்காது.
செரிமானக் கோளாறு காரணமாக உண்டாகும் அசிடிட்டியால் கூட சிலருக்கு நெஞ்சு வலி ஏற்படும். இரைப்பையின் மேல் பகுதியில் அமிலம் சேர்ந்து நிற்பதால் அந்த வலி ஏற்படும். மேல் பகுதி நமது மார்புக்கு மிக அருகில் இருப்பதால் நம்மில் பலரும் அதை நெஞ்சு வலி என நினைத்து பயப்படுவார்கள். மருத்துவரை அணுகும்போதுதான் இதைத் தெரிந்துகொள்ள முடியும். அசிடிட்டி காரணமாக மார்புப்பகுதியில் வலி வரலாம் என்று தெரிந்துகொண்டு அதையே உங்களுக்குள் பதித்துக்கொள்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். உண்மையில் மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு நெஞ்சு வலி வருகிறதென்றால், அதைக்கூட நீங்கள் அசிடிட்டி என்று நினைத்து அலட்சியமாக விட்டுவிட வாய்ப்பிருக்கிறது. இதனால் உயிரே போகும் அபாயமும் இருக்கிறது.
காய்ச்சல், தலைவலி போன்ற சிறிய பிரச்னைகளுக்குக் கூட பரவாயில்லை. பெரிய அளவிலான உடல்நலப் பிரச்னைகளுக்கு கூகிளை நாடிப்போவதுதான் வேதனை. இதில் சோகம் என்னவென்றால், மருத்துவரிடமே வந்து நான் கூகிளில் பார்த்த போது வேறு மாதிரி சொல்லியிருந்தார்களே என்று கேட்கிறார்கள். நாம் எல்லோரும் தனித்தனி உடல்கள் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஒருவருக்கு மருந்து மாத்திரையைப் பரிந்துரைக்கும் முன் அவர்களுக்கு வேறு ஏதேனும் உடல்நலப் பிரச்னைகள் இருக்கிறதா என்று கூட ஆராய்வோம். குறிப்பிட்ட சில பிரச்னைகள் உள்ளவர்களுக்கு குறிப்பிட்ட சில மருந்து மாத்திரைகள் ஒத்துக் கொள்ளாது. சிலருக்கு சில மருந்துகளில் ஒவ்வாமை இருக்கும். இதையெல்லாம் மருத்துவர்களால்தான் சரியாகப் பார்த்து அதற்கேற்ற மருந்துகளைப் பரிந்துரைக்க முடியும். ஆகவே கூகிளை நம்பாமல் மருத்துவரை நம்புங்கள்.” என்கிறார் பவித்ரா.
மேலும் படிக்க - மின்னஞ்சல் தரவுகளை தர மறுக்கும் மைக்ரோசாப்ட்
கூகிள் என்பது தகவல்களின் களம். அங்கே உண்மை, பொய் என்கிற பாகுபாடின்றின்றி பல தகவல்களும் கொட்டிக் கிடக்கும். அவற்றில் நம்பகமான வலைதளத்தில் இருந்து உண்மையான தகவல்களை நாம் பெற்றாலுமே கூட அதைக்கொண்டு நாம் சிகிச்சை செய்துகொள்ள முடியாது என்கிற உண்மையை நாம் அனைவரும் உணர வேண்டும்.
What's Your Reaction?