இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும்- அதிபர் டிரம்ப்
பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தலைவர் என்றும் இந்தியா உடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார். இந்த பயணத்தை நிறைவு செய்துவிட்டு கடந்த 12-ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். தனி விமானம் மூலம் அமரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர்.
அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி வெள்ளை மாளிகையில் அதிபர் டொனல்ட் டிரம்பை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாட்டு வர்த்தகம் மற்றும் பல்வேறு விஷயங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அதிபர் டிரம்ப் பேசியதாவது, பிரதமர் மோடி மிகச் சிறந்த தலைவர். மிகச் சிறப்பாக செயல்படுகிறார். இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும். பிரதமர் மோடி என்னுடைய சிறந்த நண்பர். இந்தியாவுக்காக மிகச்சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை அமெரிக்கா செய்ய இருக்கிறது.
அமெரிக்காவில் இருந்து அதிக அளவில் எண்ணெய் மற்றும் எரிவாயுவை இந்தியா கொள்முதல் செய்ய இருக்கிறது என்று கூறினார். மேலும், இந்தியா அமெரிக்கா இடையே ஒரு புதிய பரஸ்பர வரித் திட்டத்தை அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
மேலும் படிக்க: அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
இந்திய பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது, அமெரிக்காவை சிறந்ததாக்குவோம் (make America great again) என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். அதேபோல், இந்தியாவை சிறந்த நாடாக்கும் வளர்ந்த இந்தியாவை நோக்கி நாமும் பயணித்துக் கொண்டுள்ளோம். இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு ஜனநாயக நாடுகளும் செழிப்பான வளர்ச்சிக்கான 'மெகா ’ (MEGA) கூட்டாண்மையை உருவாக்கும் என்று குறிப்பிட்டார்.
முன்னதாக, "எங்கள் கூட்டாளிகள் எங்கள் எதிரிகளை விட மோசமானவர்கள்" என்று குறிப்பிட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா எங்களிடம் இருந்து எந்த அளவுக்கு வரி வசூலிக்கிறதோ, அதே அளவில்தான் நாங்களும் அந்நாட்டிடம் இருந்து வசூலிப்போம் என்று தெரிவித்தார்.
What's Your Reaction?






