Coimbatore To Abudhabi New Airlince Service : கோவையில் இருந்து சிங்கப்பூர் மற்றும் சார்ஜா ஆகிய சர்வதேச நாடுகளுக்கு விமான போக்குவரத்து இருந்து வந்தது. இதேபோல் மற்ற சர்வதேச நாடுகளுக்கும் விமான போக்குவரத்து கோவையில் இருந்து தொடங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது. இந்நிலையில் கோவை - அபிதாபி இடையே நேற்று (ஆகஸ்ட் 10) முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. அபுதாபியில் இருந்து கோவைக்கு நேற்று (ஆகஸ்ட் 10) காலை 163 பயணிகளுடன் இன்டிகோ விமானம் வந்து அடைந்தது. இந்த விமானத்துக்கு கோவை விமான நிலைய தீயணைப்பு படையினர் தண்ணீரை பீச்சி அடித்து வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து காலை 7.40 மணியளவில் இண்டிகோ விமானம் கோவை விமான நிலையத்தில் இருத்து அபுதாபிக்கு தனது விமான சேவையை இயக்கியது. கோவையில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் விமான சேவையானது வழங்கப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சர்வதேச விமான சேவை, தொழில் துறையினர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
முதன் முறையாக கோவை விமான நிலையத்தில் தரையிறங்கிய இந்த இண்டிகோ விமானத்தின் விமானிகள் விவேக் கந்தசாமி மற்றும் வினோத் குமார் ஆகிய இரண்டு பேருமே கோவையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் விமான பயணிகளிடம் தமிழில் பேசி வரவேற்பு கொடுத்தனர். அதில், “நாங்கள் இருவரும் கோயம்புத்தூர் என்பதால் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உள்ளது" என்று தமிழில் பேசியது பயணிகளிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் படிக்க: ஒலிம்பிக் திருவிழா இன்றுடன் நிறைவு.. பதக்க வேட்டையில் எந்த நாடு முதலிடம்?
கோவை - அபுதாபி, சிங்கப்பூர், ஷார்ஜா போலவே மேலும் சில நாடுகளுக்கு கோவையில் இருந்து விமானங்களை இயக்க வேண்டும் என்றும் அப்படி செய்யும் பட்சத்தில் கோவை கூடுதல் வளர்ச்சியை பெறும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. கோவை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்தும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. விமான நிலைய விரிவாக்கத்திற்குப் பின்னர் வரவேற்பைப் பொறுத்து மேலும் சில நாடுகளுக்கும் விமான சேவை விரிவுபடுத்தப்படும் எனக் கூறப்படுகிறது.