Paris Olympics 2024 : உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 'பாரீஸ் ஒலிம்பிக் 2024' போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் கடந்த மாதம் 26ம் தேதி தொடங்கின. மொத்தம் 206 நாடுகளை சேர்ந்த 10,500 விளையாட்டு வீரர்கள் பங்கேற்ற இந்த ஒலிம்பிக் தொடர் இன்றுடன் (ஆகஸ்ட் 11) நிறைவு பெற உள்ளன. கடைசி நாளான இன்று மல்யுத்தம், கூடைப்பந்து, வாலிபால், தடகளம் என 9 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்திய நேரப்படி இன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவு விழா நடைபெறுகிறது. நிறைவு விழா அணிவகுப்பில் இந்தியா சார்பில் இரட்டை பதக்க நாயகி மனு பாக்கர் மற்றும் ஹாக்கி அணியில் வெண்கலம் வென்ற ஸ்ரீஜேஷ் ஆகியோர் நமது தேசியக்கொடியை ஏந்திச் செல்ல உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை மொத்தம் 117 வீரர், வீராங்கனைகள் ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடினார்கள்.
இந்தியா இந்த ஒலிம்பிக் தொடரில் 5 வெண்கலகம், 1 வெள்ளி என மொத்தம் 6 பதங்கங்களை கைப்பற்றியுள்ளது. எந்த ஒரு தங்க பதக்கத்தையும் அறுவடை செய்யவில்லை. துப்பாக்கி சுடும் போட்டியில் இந்திய வீராங்கனை மனு பாக்கர் 2 வெண்கல பதக்கத்தை தாய்நாட்டுக்காக வென்று கொடுத்தார்.இதேபோல் துப்பாக்கி சுடுதலில் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவு தகுதிச்சுற்று போட்டியில், இந்திய வீரர் ஸ்வப்னில் குசாலே வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
மேலும் ஹாக்கி போட்டியில் ஸ்பெயின் அணியை வென்று இந்திய அணி வெண்கல பதக்கம் வென்றது. இதேபோல் 55 கிலோ எடை பிரிவுக்கான மல்யுத்தப் போட்டியில், 21 வயதான இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று அசத்தினார். ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்தார். இதேபோல் இந்தியாவுக்கு இன்னொரு தங்கம் அல்லது வெள்ளி பதக்கம் கிடைத்திருக்க வேண்டியது.
50 கிலோ எடை பிரிவு மல்யுத்த இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் பங்கேற்க இருந்த நிலையில், 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் அவரை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி திடீரென தகுதி நீக்கம் செய்தது. இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு கலைந்து போனது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் தகுதி நீக்கத்தை எதிர்த்து வினேஷ் போகத் விளையாட்டுக்களுக்கான நடுவர் மன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
'பாரீஸ் ஒலிம்பிக் 2024' தொடரின் பதக்க பட்டியலில் வழக்கம்போல் சீனா ஆதிக்கம் செலுத்தியுள்ளது. அந்த நாடு 39 தங்கம், 27 வெள்ளி, 24 வெண்கலம் என மொத்தம் 90 பதக்கங்களை வேட்டையாடி முதலிடத்தில் அமர்ந்துள்ளது. அமெரிக்கா 38 தங்கம், 42 வெள்ளி, 42 வெண்கலம் என மொத்தம் 122 பதக்கங்களை வென்றுள்ளது. ஆஸ்திரேலியா 18 தங்கம், 18 வெள்ளி, 14 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது. ஜப்பான் 18 தங்கம், 12 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 43 பதக்கங்களை வென்றுள்ளது. இந்தியா 5 வெண்கலகம், 1 வெள்ளி என 6 பதங்கங்களுடன் 71வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.