Durai Dayanidhi Death Threats : வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க. அழகிரி. முன்னாள் மத்திய அமைச்சர். இவரது மகன் துரை தயாநிதி. தொழில்அதிபராக உள்ள துரை தயாநிதி பல்வேறு திரைப்படங்களையும் தயாரித்துள்ளார். சென்னை போயஸ் கார்டனில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வந்த துரை தயாநிதி, கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி வீட்டில் இருந்தபோது திடீரென மயங்கி சரிந்து விழுந்தார்.
உடனடியாக அவரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். மருத்துவர்கள் பரிசோதனையில் அவரது மூளையில் ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்பு இதற்காக வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போலோ மருத்துவமனையில் சுமார் 3 மாதங்கள் சிகிச்சை பெற்ற துரை தயாநிதி, பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது துரை தயாநிதி வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் பிசியோதெரபி சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையின் ஏ-பிளாக்கில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தந்தை மு.க. அழகிரி மற்றும் குடும்பத்தினர் உடனிருந்து அவரை கவனித்து வருகின்றனர். துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் தளம் காவல் துறையினரின் முழு கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்நிலையில், மர்ம நபர் ஒருவர் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வேலூர் சிஎம்சி மருத்துவமனை மருத்துவ கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு நேற்று வந்த ஒரு மின்னஞ்சலில் துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சிஎம்சி மருத்துவமனை கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கிரண் ஸ்ருதிக்கு மின்னஞ்சல் வழியாக புகார் அனுப்பி வைக்கப்பட்டது. துரை தயாநிதிக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார்? என்பது குறித்து சைபர் குற்றப்பிரிவு காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொலை மிரட்டல் வந்துள்ளதை தொடர்ந்து, துரை தயாநிதி சிகிச்சை பெற்று வரும் சிஎம்சி மருத்துவமனை ஏ-பிளாக்கில் கூடுதலாக ஓர் உதவி ஆய்வாளர் தலைமையில் 3 போலீசார் தீவிர பாதுகாப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.