அரசியல்

TVK Vijay : தவெக தலைவர் விஜய்-க்கு "Y" பிரிவு பாதுகாப்பு.. எதற்காக தெரியுமா?

TVK Vijay With Guards : தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்-க்கு  “Y” பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

TVK Vijay : தவெக தலைவர் விஜய்-க்கு
தவெக தலைவர் விஜய்

TVK Vijay With Guards : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ஆம் தேதி ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்ற கட்சியைத் தொடங்கி அரசியல் தலைவராக உருவெடுத்தார். அப்போது அறிக்கை வெளியிட்டிருந்த விஜய் ‘2026 சட்டசபை தேர்தல் தான் நமது இலக்கு’ என்று குறிப்பிட்டிருந்தார். பின்னர் விக்கிரவாண்டியில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார்.

புதிய கட்சி தொடங்கிய விஜய், தான் இனி படங்களில் நடிக்கப்போவதில்லை என்று அறிவித்தார். இது ரசிகர்கள் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்தாலும் அரசியல் தலைவர்கள் பலரை உன்னிப்பாக கவனிக்க வைத்தது. தொடர்ந்து, பல சமூக பிரச்சனைகளுக்கு சமூக வலைதளத்தின் மூலம் விஜய் குரல் கொடுத்து வந்தார். பின்னர், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்களை சந்தித்தார். 

அப்போது, மத்திய அரசையும் மாநில அரசையும் கடுமையாக விமர்சித்து விஜய் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா, அதிமுக தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல் குமார் மற்றும் சமூக ஊடகப் பேச்சாளர் ராஜ் மோகன் ஆகியோர் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தனர். 

இவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டது. தொடந்து, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்(TVK Vijay), தேர்தல் வியூக பொறுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். தமிழகத்தை பொறுத்தவரை 30 சதவீதம் அல்லது அதற்கு மேல் வாக்கு சதவீதம் பெறக்கூடிய கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்ற நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 15 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று பிரசாந்த் கிஷோர் கூறியதாக தெரிகிறது.

இவ்வாறு 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டும் என்று உழைத்துக் கொண்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு சார்ந்து உளவு பிரிவு தகவல்களின் அடிப்படையில் அவர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் பாதுகாப்பை வழங்கி வருகின்றது.

அந்த வகையில், விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு(Y Category Security) வழங்கப்பட்டுள்ளது. இதில் இரண்டு காவலர்களும், ஒரு ஆயுதம் ஏந்திய காவலரும் பாதுகாப்பு பணியில் விஜயை  சுற்றி ஈடுபடுவார்கள். தமிழகத்திற்குள் அவர் எங்கு சென்றாலும் இந்த பாதுகாப்பு பிரிவினர் உடன் பயணித்து பாதுகாப்பு வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டில் உள்ள முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு கருதி மத்திய அரசு அவர்களுக்கான பாதுகாப்பை வழங்கி வருகின்றது. அந்த வகையில் Y,Z,Zplus  என்று மூன்று பிரிவுகளின் கீழ் முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படும். அதன்படி, அண்மையில் அரசியலில் இறங்கி உள்ள விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.