அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று அமெரிக்கா சென்றடைந்தார். இவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

Feb 13, 2025 - 07:48
 0
அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு
பிரதமர் மோடி, அமெரிக்க பயணம்

பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்றார். இந்த பயணத்தை நிறைவு செய்துவிட்டு நேற்று அமெரிக்கா புறப்பட்டார். தனி விமானம் மூலம் அமரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடி, இந்திய நேரப்படி இன்று அதிகாலை வாஷிங்டன்னிற்கு சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள உள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கிறார். அமெரிக்காவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி அந்நாட்டின் 47-வது அதிபராக பதவியேற்றார்.

டிரம்ப் பதவிக்காலத்தில் பிரதமர் மோடி அவரை சந்திப்பது இதுவே முதல் முறையாகும். இரு தலைவர்களுக்கும் இடையே நீண்ட காலமாக நெருங்கிய நட்பு நீடித்து வரும் நிலையில், இந்த சந்திப்பு இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. டிரம்ப் நிர்வாகம் பதவியேற்ற சில வாரங்களில் அமெரிக்காவிற்கு செல்லும் நான்காவது வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி ஆவார்.

அமெரிக்க பயணத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி,  ஸ்டார்லிங்க்கின் தலைவர் எலான் மஸ்கை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

முன்னதாக தனது அமெரிக்க பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில், அதிபர் டொனால்ட் டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒத்துழைப்பில் பெற்ற வெற்றிகளை தொடர இந்த பயணம் ஒரு வாய்ப்பாக இருக்கும். அத்துடன் தொழில்நுட்பம், வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி உள்ளிட்ட துறைகளில் அமெரிக்காவுடனான இந்தியாவின் கூட்டாண்மையை மேலும் உயர்த்தும் ஒரு செயல் திட்டத்தை உருவாக்கவும் இது உதவும் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், தனது நண்பர் டிரம்புடனான சந்திப்பை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக கூறியிருந்த மோடி, இந்தியா, அமெரிக்கா இடையே ஒரு விரிவான கூட்டுறவை உருவாக்க அவரது முதல் பதவிக்காலத்தில் இணைந்து பணியாற்றியதை தான் மிகவும் அன்புடன் நினைவில் கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow