நிதி ஆயோக்.. பேச வாய்ப்பில்லை.. அன்று ஆவேசப்பட்ட ஜெயலலிதா .. இன்று மம்தா பானர்ஜி வெளிநடப்பு

Mamata Banerjee Boycott NITI Aayog Meeting : நிதி ஆயோக் கூட்டத்தில் மாநில முதல்வர்களுக்கு பேச வாய்ப்பு தரப்படவில்லை என்று கூறி கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்துள்ளார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி

Jul 27, 2024 - 13:18
Jul 27, 2024 - 16:45
 0
நிதி ஆயோக்.. பேச வாய்ப்பில்லை.. அன்று ஆவேசப்பட்ட ஜெயலலிதா .. இன்று  மம்தா பானர்ஜி வெளிநடப்பு
Mamata Banerjee Boycott NITI Aayog Meeting

Mamata Banerjee Boycott NITI Aayog Meeting : பிரதமர் தலைமையில் டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு  தேசிய வளர்ச்சிக் கவுன்சில்  கூட்டத்தில் பேச தமக்கு போதிய நேரம் ஒதுக்காததை கண்டித்து முதலமைச்சர் ஜெயலலிதா கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தார். இன்றைய தினம் வெறும் 5 நிமிடங்கள் கூட பேச வாய்ப்பு தரவில்லை என்று கூறி மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார். 

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு உட்பட எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாத விவகாரம், விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தபோது, பட்ஜெட்டில் பாரபட்சம் காட்டியிருப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி எம்.பி-க்கள், நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

இந்தப் பரபரப்பான சூழலில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் இன்று (ஜூலை 27) நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட்டைக் கண்டித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் உட்பட ஏழு மாநில முதல்வர்கள், நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளனர்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று முதலில் அறிவித்தவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலேயே அந்த அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டார். பின்னர், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிக்கப் போவதாக அறிவித்தனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஜே.எம்.எம். கட்சியைச் சேர்ந்த ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோரும் நிதி ஆயோக் கூட்டத்தைப் புறக்கணிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

இந்தநிலையில்தான் மத்திய பட்ஜெட்டையும், பா.ஜ.க அரசையும் கடுமையாக விமர்சித்திருக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தார்.   ‘நிதி ஆயோக் என்ற அமைப்பைக் கலைத்துவிட்டு, முன்பு இருந்த திட்ட கமிஷனை மீண்டும் கொண்டுவர வேண்டும்’ என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி வந்த நிலையில் இன்றைய கூட்டத்திற்கு சென்றார் மம்தா பானர்ஜி. போன வேகத்தில் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார் மம்தா பானர்ஜி. 

(Mamata Banerjee walks out Niti Aayog) இந்நிலையில், வெளிநடப்பு செய்ததற்கான காரணத்தை மம்தா தெரிவித்துள்ளார். வெளிநடப்பு செய்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த மம்தா பானர்ஜி,  மாநில அரசுகளை மத்திய அரசு பாரபட்சம் காட்டக் கூடாது என்று நான் கூறினேன். நான் பேச விரும்பினேன், ஆனால் 5 நிமிடம் மட்டுமே பேச அனுமதித்தார்கள். 10-20 நிமிடம் நான் மட்டுமே பங்கேற்றேன், ஆனால் என்னைப் பேச அனுமதிக்கவில்லை என தெரிவித்தார். 

இதே போல ஒரு சம்பவம் கடந்த 2012ஆம் ஆண்டு நடைபெற்றது. அப்போதய தமிழ்நாடு முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்போதய பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற தேசிய வளர்ச்சி வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தில் முதல்வர்கள் தங்கள் மாநில பிரச்னைகள் குறித்து பேச வெறும் 10 நிமிடங்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டதால், கூட்டத்தில் இருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார்.

பின்னர் வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 10 நிமிடங்கள் மட்டுமே தம்மை பேச அனுமதித்ததாகவும், அதன் பின்னர் மணி அடித்து  பேச்சை நிறுத்துமாறு கூறி தம்மை அவமதித்துவிட்டதாகவும்  குற்றம் சாட்டினார் .

இது தமக்கு மட்டுமல்ல;தமிழ்நாட்டிற்கும்,தமிழக மக்களுக்கும் ஏற்பட்ட அவமதிப்பு என்றும் அவர் கூறினார். தமக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தமிழ்நாட்டின் தேவைகள் குறித்து தம்மால் முழுமையாக பேச முடியவில்லை என்றும், தாம் பேச நினைத்ததில் மூன்றில் ஒருபங்கு மட்டுமே பேசியதாகவும் கூறிய ஜெயலலிதா மாநிலத்தின் பிரச்னையை எடுத்துரைக்க போதிய கால அவகாசம் வழங்க முடியாது என்றால்,   மாநில முதல்வர்களை ஏன் அழைக்க வேண்டும்  என்றும்  காட்டமாக கேள்வி எழுப்பினார். இன்றைய தினம் தனக்கு பேச வாய்ப்பு தராத மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளார் மம்தா பானர்ஜி. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow