சர்வதேச மகளிர் தினம் 2025: பாலின சமத்துவ உலகத்தை உருவாக்க ஒன்றாக செயல்படுவோம்.. தலைவர்கள் வாழ்த்து

'சர்வதேச மகளிர் தினத்தை’ ஒட்டி பெண்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

Mar 8, 2025 - 11:18
 0
சர்வதேச மகளிர் தினம் 2025: பாலின சமத்துவ உலகத்தை உருவாக்க ஒன்றாக செயல்படுவோம்.. தலைவர்கள் வாழ்த்து
மு.க.ஸ்டாலின்-திரெளபதி முர்மு- எடப்பாடி பழனிசாமி

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி 'சர்வதேச மகளிர் தினம்'  கொண்டாடப்படுகிறது. இந்த நாள் கொண்டாட்டத்திற்காக மட்டுமல்ல பெண்களின் உரிமைகள் மற்றும் சாதனைகளை அங்கீகரித்து அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கியமான முன்முயற்சியாகும். 'சர்வதேச மகளிர் தினத்தை’ ஒட்டி பெண்களுக்கு பல கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு 

“சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நாம் கொண்டாடுகிறோம். இந்த தினத்தில் பெண்களின் உரிமைகள், சமத்துவம் மற்றும் அதிகாரமளித்தல் ஆகியவற்றின் நோக்கத்தை வலுப்படுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளவும் தீர்மானிக்கிறோம்.

நமது சகோதரிகளும், மகள்களும் கண்ணாடி கூரைகளை உடைத்து எல்லைகளைத் தாண்டி செல்கிறார்கள். பல்வேறு துறைகளில் பெண்கள் பாதைகளை அமைக்கும் போது அவர்கள் பின்தங்காமல் இருப்பதை உறுதிசெய்து, அவர்களின் பயணத்தில் அவர்களுக்கான ஆதரவை உறுதிப்படுத்துவோம். பெண்களும், சிறுமிகளும் தங்கள் கனவுகளை அச்சமின்றி தொடரக்கூடிய பாலின சமத்துவ உலகத்தை உருவாக்க ஒன்றாக செயல்படுவோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“மாதம்தோறும் ஒரு கோடியே 14 லட்சம் சகோதரிகள் 1000 ரூபாய் உரிமைத் தொகை பெறுகிறார்களே, தாய்வீட்டு சீர் மாதிரி எங்க அண்ணன் ஸ்டாலின் தருகிற மாதாந்திர சீர் என்று தமிழக சகோதரிகள் மனம் மகிழ சொல்கிறார்கள். அதுதான் விடியல் ஆட்சி. ஆட்சி பொறுப்பேற்றதும் நான் இட்ட முதல் கையெழுத்தே மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்திற்கு தான்.

இந்த விடியல் பயணமானது மகளிரின் சேமிப்பை அதிகரித்துள்ளது. அரசு பள்ளியில் படித்த பெண் பிள்ளைகள் பலர் கல்லூரிக்கு செல்ல முடியாத நிலையை மாற்றி உயர் கல்வி பயில உருவாக்கப்பட்ட திட்டம் தான் புதுமைப்பெண் திட்டம். தமிழ்நாடு மாணவ மாணவிகள் என்னை அப்பா அப்பா என்று வாய் நிறைய அழைக்கும் போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பாச உணர்வுதான் முக்கியம். அன்பு சகோதரிகள் அனைவருக்கும் உலக மகளிர் தின வாழ்த்துகள்” என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி

"அன்பை அள்ளிக் கொடுப்பதில் அன்னையாக, அறிவை அருளும் ஆசிரியையாக, பாசத்தோடு அரவணைக்கும் சகோதரியாக, மனதோடு மனம் கலந்த மனைவியாக, மகளாக, நட்பைக் காட்டும் தோழியாக, தர்மத்தைச் சொல்லும் பாட்டியாக என வாழ்நாள் முழுவதும் நம்மோடு பயணிக்கின்றவர்கள்தான் பெண்கள். தமிழ் கூறும் நல்லுலகில் வாழும் மகளிர் அனைவருக்கும் எனது உளப்பூர்வமான சர்வதேச மகளிர்தினம் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே சமயம், இன்றைக்கு தமிழ்நாடு பெண்களுக்கு துளி கூட பாதுகாப்பு இல்லாத மாநிலமாக மாறியிருப்பது மிகுந்த கவலைக்குரியது. சிறுமி முதல் மூதாட்டி வரை, எந்தவொரு பெண்ணுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதும், பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கத் திராணியற்ற ஒரு ஆட்சியாக இன்றைய ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சி இருப்பதும் வெட்கக்கேடானது.

அன்புச் சகோதரிகளே- உங்களுக்காக, உங்கள் பாதுகாப்புக்காக என்றைக்கும் அதிமுக போராடும். 2026-ல் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும், இன்று நீங்கள் அச்சத்துடன் இருக்கின்ற நிலை மாறி, மிகவும் பாதுகாப்புடன், சுதந்திரமாக செயல்பட்டு, பல சாதனைகளைப் புரிகின்ற காலமாக நம் ஆட்சிக்காலம் நிச்சயம் இருக்கும்!” என்று பதிவிட்டுள்ளார்.

பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன்

"தடைகளை தகர்த்து தவிடு பொடியாக்கி.... சாதனைகளாக தடம் பதிக்க அனைத்து மகளிரையும் வாழ்த்துகிறேன்.... அனைத்து மகளிர்களுக்கும் எனது இனிய சர்வதேச மகளிர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

மார்ச் - 8 மகளிர் தினமாக  இருப்பதை விட ஒவ்வொரு தினமும் மகளிருக்கான தினமாக இருக்க வேண்டும் என்பதே இன்று அனைவரும் விரும்புவது. இன்று பெண்கள் சிறப்பாக முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் பெண்களுக்கு முழுமையான தடையில்லாத அடிப்படைக் கல்வி, மேல்நிலைக் கல்வி, வரதட்சணை இல்லாத திருமணங்கள், கலைக்கப்படாத பெண் சிசுக்கள்,பாலியல் தொந்தரவு இல்லாத தொழில் நிறுவனங்கள், பாரபட்சமில்லாத வாய்ப்புகள், சமுதாய களம் மட்டுமல்ல,மனதளவில் கூட பெண்கள் மீது மரியாதை முழுமையாக கிடைக்கிறதோ அதுவே மகளிர் தினம் என்பதே சரியானதாக இருக்கும்.

இவையெல்லாம் முழுமையடைந்து ஒவ்வொரு நாளும் மகளிருக்கான தினமாக கொண்டாடப்பட வேண்டும். நம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மூலம் இந்த நம்பிக்கை பிறந்திருக்கிறது. பிறந்த பெண் என் பெருமை என்று செல்வமகள் சேமிப்பு திட்டத்தை ஏற்படுத்தியதிலிருந்து பெண்கள் பொருளாதாரத்திலும், தொழிலிலும் முத்திரை பதிக்க வேண்டும் என முத்ரா வங்கி திட்டம் கொண்டு வந்ததிலிருந்து பல பெண்களுக்கு அமைச்சரவையில் சவாலான துறைகளை அளித்ததிலிருந்து மகளிரின் நம்பிக்கை நட்சத்திரமாக நம் பிரதமர் நரேந்திர மோடி திகழ்கிறார்கள்.

இந்தச் சூழ்நிலையை பயன்படுத்தி மகளிர் அனைவரும் நம்பிக்கையின் நட்சத்திரமாக ஒளிர இந்த மகளிர் தினத்தில் வாழ்த்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow