அதானிக்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பா? செந்தில் பாலாஜி விளக்கம்!
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சூரிய மின்சார விநியோகம் தொடர்பான ஒப்பந்தம் பெறுவதற்கு, சுமார் ரூ. 20,000 கோடி லஞ்சம் தர, தொழிலதிபர் கௌதம் அதானி கூறியதாக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. இவ்வழக்கில், கவுதம் அதானி மற்றும் அவரது உறவினர் சாகர் அதானி உட்பட 7 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ளது இதனால் இந்திய பங்குச்சந்தைகளில் அதானி குழும பங்குகள் கடும் சரிவை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில் அதானி நிறுவனத்திற்கும் தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கும் தொடர்பு இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகின்றன. தற்போது இதுகுறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு அதானி நிறுவனத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், “ஒவ்வொரு மாநிலமும் ஆண்டுதோறும் நுகர்கின்ற மொத்த மின்சாரத்தில் குறிப்பிடத்தக்க அளவு புதுப்பிக்கத்தக்க மின் சக்தியை பயன்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த வேண்டும் என்ற ஒன்றிய அரசின் விதியின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் சூரிய ஒளி மினசாரத்தை வாங்க வேண்டியுள்ளது. அப்படி வாங்காதபட்சத்தில் பல்வேறு விதமான அழுத்தங்கள் மாநில அரசுகளுக்கு உருவாகிறது. இதன் அடிப்படையில், தமிழ்நாடு மின்சார வாரியம் 2000 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (SECI) என்ற ஒன்றிய அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
தமிழ்நாட்டை பொறுத்த வரையிலும் திமுக ஆட்சி அமைந்த பிறகு அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு சூரிய மின்சாரம் தொடர்பாக எந்த நேரடித் தொடர்பிலும் இல்லை. Solar Energy Corporation Of India (SECI) என்ற ஒன்றிய அரசின் நிறுவனத்திடம்தான் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்து சூரிய மின்சார கொள்முதலைச் செய்கிறது.
மின் கொள்முதலுக்கான விலை நிர்ணயத்தை SECI செய்கிறது. மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அந்த விலையை அங்கீகரிப்பதா, நிராகரிப்பதா என முடிவு செய்கிறது.
அதிமுக ஆட்சியில் ஒரு யூனிட்டுக்கு 7.25 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது. அதிமுக ஆட்சியில் அதானி நிறுவனத்துடன் நேரடி ஒப்பந்தம் கையொப்பமிட்டது. ஆனால் கடந்த மூன்றாண்டுகளில் திமுக ஆட்சியில் திமுக அரசு அதானி நிறுவனத்துடன் எந்தவிதமான ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. திமுக ஆட்சியில் SECI யுடன் மட்டுமே, அதுவும் ஒரு யூனிட்டுக்கு 2.61 ரூபாய் என தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
தற்போதைய மாநில அரசின் அனைத்துவிதமான வரவு செலவும் SECI யுடன் மட்டுமே உள்ளது தவிர எந்தவிதமான தனிப்பட்ட நிறுவனங்களுடனும் இல்லை.
தங்களின் மின் தேவைகளுக்காக மின்சாரத்தை விலை கொடுத்து வாங்கும் மாநில மின்வாரியங்களைக் கண்டறிந்து அவர்களுக்கு அதானி நிறுவனத்திடமிருந்து பெற்று மின்சாரத்தை விற்கும் புரோக்கராக SECI செயல்பட்டது என அமெரிக்க நீதிமன்றம் குறிப்பிடுகிறது.
அரசு அதிகாரிகளுக்கு அதானி குழுமம் லஞ்சம் வழங்கியது என்றால் எந்த நிறுவனத்தின் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது என்பதைத்தான் விசாரிக்க வேண்டும்” என தமிழ்நாடு மின்சார வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
What's Your Reaction?