இந்தியா

பெண்களுக்கு Work From Home வேலை திட்டம்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில் ஒவ்வொரு  நகரம், மண்டலத்தில் 'Co working space' எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐடி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும் என்று ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கு Work From Home வேலை திட்டம்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு
கோப்பு படம்

ஆந்திரப் பிரதேச அரசு பெண்களின் வேலை மற்றும் வாழ்க்கை சமநிலையை (Work Life Balance) மேம்படுத்தவும், வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும் குறிப்பாக பெண்களுக்கு "வொர்க் ஃப்ரம் ஹோம்"  (Work From Home) கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து ஆந்திரப்பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,  “இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பெண்கள் மற்றும் பெண்குழந்தைகளுக்கான சர்வதேச தினம். அவர்கள் சாதனைகளை நாங்கள் கொண்டாடுகிறோம். மேலும் இந்தத் துறைகளில் வளர்ச்சி வாய்ப்புகளை அவர்களுக்கு சமமான மற்றும் முழு அணுகலை வழங்குவதற்கு எங்களை அர்ப்பணிக்கிறோம்.

கொரோனா தொற்று காலங்களில் பணி நிலப்பரப்பு மாறியது. தொழில்நுட்பங்கள் எளிதில் கிடைக்க கூடியதாக இருந்ததால் "வொர்க் ஃப்ரம் ஹோம்"  (Work From Home) முக்கியத்துவம் பெற்றது. இது உற்பத்தித் திறன் கொண்ட பணிச்சூழலை உருவாக்கவும், வணிகங்களையும், ஊழியர்களையும் ஒரே மாதியாக மேம்படுத்தவும் உதவும். இத்தகைய முயற்சிகள்  சிறந்த வேலை, வாழ்க்கை, சமநிலையையும் அடைய உதவும். 

ஆந்திராவில் இந்த அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். தகவல் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய திறன் மைய கொள்கை 4.0-ன் ஒரு பகுதியாக, பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில் ஒவ்வொரு  நகரம், மண்டலத்தில் 'Co working space' எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப் புறங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐடி நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகம் எங்கும் வேலை செய்யும் முறையில் பெரும் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அலுவலகத்திலிருந்து வேலை செய்து வந்த ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்யுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்கள். இந்த முறை முதலில் வசதியாக இருந்தது. அதாவது பயண நேரத்தை மிச்சப்படுத்தியது. ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் அதிக நேரத்தை செலவிட்டனர். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை இரண்டையும் சமநிலைப்படுத்தவும் உதவியது. 

ஆனால், சில நாட்களில் ஊழியர்கள் தங்களது வேலை நேரத்தையும், ஓய்வு நேரத்தையும் பிரித்து பார்க்க முடியாமல் தவித்தனர். சில அலுவலகங்கள் "வொர்க் ஃப்ரம் ஹோம்"  (Work From Home) வேலையில் இருக்கும் ஊழியர்களை அதிக நேரம் வேலை செய்யுமாறு வற்புறுத்தினார்கள். இதனால் ஊழியர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டனர். மேலும் அலுவலகங்களில் உள்ள ஊழியர்களுடன் நேரடியாக பழகும் வாய்ப்பு இல்லாததால் ஊழியர்கள் பலர் தனிமையை உணர்ந்தனர்.

இந்நிலையில், ஆந்திரப் பிரதேச அரசு, பெண்களுக்கு "வொர்க் ஃப்ரம் ஹோம்"  (Work From Home) கொள்கையை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது எந்த அளவிற்கு சாத்தியப்படும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.