Flights Delay in Chennai : சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலையில் அதிகப்படியான பனிப்பொழிவும் பகலில் கடுமையான வெயிலுமாக பருவநிலை மாறி மாறி இருந்து வருகிறது. இதனால் அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அதிகாலையில் ஏற்படும் அதிகப்படியான பனிப்பொழிவால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி செல்கின்றனர்.
சென்னையின் மைய பகுதிகளான எழும்பூர், பிராட்வே, கிண்டி, நுங்கம்பாக்கம் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதேபோல அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காமராஜர் சாலைகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை 8 மணி அளவிலும் பனிப்பொழிவு நிலவியதால் பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவதியடைந்துள்ளனர். இதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், செங்கல்பட்டு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
தாமதமாகும் விமானங்களால் பயணிகள் அவதி:
சென்னை விமான(Chennai Airport) நிலையத்தில் பனிமூட்டம் காரணமாக, 10 புறப்பாடு விமானங்கள், 4 வருகை விமானங்கள் என மொத்தம் 14 விமானங்கள் தாமதமாகி உள்ளது. அதாவது, காலை நேரங்களில் சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன. அதேபோல் இன்று காலையிலும் சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களான சிங்கப்பூர், துபாய், பக்ரைன், அபுதாபி, மஸ்கட், கொல்கத்தா, சூரத், விஜயவாடா, புவனேஸ்வர், அந்தமான் ஆகிய 10 புறப்பாடு விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.
மேலும் படிக்க: சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. ரயில்-விமான சேவைகள் பாதிப்பு
தொடர்ந்து, மஸ்கட், கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வரும் நான்கு விமானங்கள் பனிமூட்டம் காரணமாக சுமார் 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன. இதனால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த சில நாட்களாக தொடர் பனிமூட்டம்(Snowfall) காரணமாக விமானங்கள் சென்னை விமான நிலையத்திற்கு(Chennai Flights) வருவதற்கு பதிலாக வேறு விமான நிலையங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. ஆனால், இன்று பனிமூட்டம் சற்று குறைவாக காணப்பட்டதால் விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டன.