சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு.. ரயில்-விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் நிலவும் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில் சேவைகள் மற்றும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
தமிழக பகுதிகளில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதன் எதிரொலியாக, சென்னையில் பனிமூட்டம் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை முதல் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. சென்னையின் மைய பகுதிகளான எழும்பூர், பிராட்வே, கிண்டி, நுங்கம்பாக்கம் பகுதிகளில் அதிகாலை முதலே கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
அதேபோல அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் காமராஜர் சாலைகளில் பனிப்பொழிவு காணப்படுகிறது. காலை 8 மணி அளவிலும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள்
முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டப்படி சென்றனர். அதிகாலை அலுவலகத்திற்கு செல்லும் ஊழியர்களும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அதுமட்டுமல்லாமல், பள்ளி, கல்லூரி மாணவர்களும் அவதியடைந்துள்ளனர். இதேபோல், சென்னையின் புறநகர் பகுதிகளான தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், செங்கல்பட்டு பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது.
தாமதமாக வரும் மின்சார ரயில்கள்
சென்னையில் பெரும்பாலான மக்கள் அலுவலகத்திற்கு செல்வதற்கு மின்சார ரயிலை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், கடும் பனிப்பொழிவு காரணமாக மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. பெரும்பாலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வந்ததால் ரயில்களில் அதிகப்படியான கூட்டம் அலைமோதியது. இதனால், பயணிகள், மாணவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகினர். மேலும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரக்கூடிய விரைவு ரயில்கள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக எழும்பூர் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
வானில் வட்டமடிக்கும் விமானங்கள்
அதிகப்படியான பனி மூட்டத்தால் சென்னையில் தரையிறங்க வேண்டிய ஆறு விமானங்கள் பெங்களூர், திருவனந்தபுரம் மற்றும் ஹைதராபாத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், சென்னை விமான நிலையத்தில் 25-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் அவதிக்கியுள்ளாகியுள்ளனர். மேலும், 148 பயணிகளுடன் சென்னை வந்த விமானம் தரையிறங்க முடியாமல் தொடர்ந்து வானில் வட்டமடித்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
What's Your Reaction?