சென்னை ஜாபர்கான் பேட்டை ஏரிக்கரை தெரு கங்கையம்மன் கோவில் அருகே அண்ணா, பெரியார், கலைஞர் என மூன்று சிலைகள் வரிசையாக ஒரே இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அண்ணாவின் நினைவு நாளையொட்டி திராவிட இயக்க அமைப்பினர், அரசியல் கட்சி தலைவர்கள் அந்த மூன்று தலைவர்களின் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்து வந்தனர்.
நேற்று (பிப் 3) இரவு பச்சை வேட்டி, துண்டு மற்றும் கழுத்தில் மாலை அணிந்து கொண்டிருந்த நபர் ஒருவர் பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகள் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு சென்று பெரியாரை வணங்குவது போல் வணங்கி விட்டு காலில் அணிந்திருந்த காலணியை எடுத்து பெரியார் சிலை மீது அடித்து பெரியார் சிலையை அவமதித்துள்ளார். அதனை அந்நபர் முகநூலிலும் நேரலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் மற்றும் மதிமுக ,திமுக கட்சியினர் சிலைகள் அமைக்கப்பட்டு இருந்த இடத்திற்கு வந்து மேடையில் இருந்த நபரை பிடித்து குமரன் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்பு இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், அந்நபர் ஜாபர்கான் பேட்டை பகுதியைச் சேர்ந்த அஜய் என்பதும் இவர் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரியார் சிலை அவமதித்த விவகாரம் தொடர்பாக திராவிட இயக்க அமைப்பினர், மதிமுக, திமுக போன்ற அரசியல் கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் அஜய் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இதற்கு பின்னால் இருக்கும் நபர்களையும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானையும் கைது செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர்.
இந்நிலையில், பெரியார் சிலையை அவமதித்த நாம் தமிழர் கட்சி குருதிக்கொடை பாசறை பகுதி செயலாளர் அஜய் மீது ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சைதாப்பேட்டை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். குற்றவாளியான அஜயை 18-ஆம் தேதி வரை புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.