Drugs Seized: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு... ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

சிங்கப்பூரில் இருந்து கோவை வந்த விமானத்தில், ரூ.1 கோடி மதிப்பிலான 2 கிலோ போதைப் பொருட்களை மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Aug 20, 2024 - 21:04
Aug 21, 2024 - 10:14
 0
Drugs Seized: கோவை விமான நிலையத்தில் பரபரப்பு... ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!
ஒரு கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்

கோவை: சிங்கப்பூரில் இருந்து கோவைக்கும், கோவையில் இருந்து சிங்கப்பூருக்கும் ஸ்கூட் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் இருந்து கோவை வரும் விமானத்தில் போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக மத்திய வருவாய் குற்றப்புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஸ்கூட் விமானத்தில் கோவை வந்த பயணிகளை குற்றப்புலனாய்வு அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகத்திடமாக வந்த பயணி ஒருவரை அதிகாரிகள் நிறுத்தி சோதனையிட்டனர். 

அதில், அவரது பையில் கார்ன் பிளாக் பாக்கெட்டுகள் இருந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அவரிடம் இருந்த கார்ன் பிளாக் பாக்கெட்டுகளை பிரித்து பார்த்த போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் 2 கிலோ எடை கொண்ட பச்சை நிறத்திலான கஞ்சா, மரிஜுவனா வகை போதைப் பொருட்கள் இருந்தது தெரியவந்தது. சர்வதேச அளவில் இதன் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் என சொல்லப்படுகிறது. இதையடுத்து அந்த பயணியை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

முன்னதாக கடந்த மாதம் சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 70 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 92 கிராம் பெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருட்கள் ராமநாதபுரம் மாவட்டம் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்தது தெரியவந்தது. இந்தச் சம்பவத்தில் 3 பேரை போலீஸார் கைது செய்தனர். சென்னையில் 70 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட அதிர்ச்சியில் இருந்தே இன்னும் பொதுமக்களால் மீள முடியவில்லை. இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் ஒரு கோடி மதிப்பிலான 2 கிலோ போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

மேலும் படிக்க - 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

இந்தச் சம்பவத்தின் பின்னணியில் சர்வதேச போதைப் பொருட்கள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில், குன்றத்தூரில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட பிரவுன் சுகர், 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவில் இருந்து காரில் பிரவுன் சுகர், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் கடத்தி வருவதாக தாம்பரம் மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ஸ்ரீதேவி தலைமையில் தாம்பரம் மதுவிலக்கு போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். குன்றத்தூர் அருகே வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் சந்தேகத்திற்கிடமாக வந்த காரை மடக்கி சோதனை செய்தபோது, அதில் பயணித்தவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியுள்ளனர். 

இதனையடுத்து அந்த காரை சோதனை செய்த போது, 200 கிராம் பிரவுன் சுகர், 5 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காரை ஓட்டி வந்த சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த சபீனா காடூன் ஆகிய இரண்டு பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட பிரவுன் சுகர், கஞ்சாவை எடுத்து வந்து சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சப்ளை செய்ய வந்தது தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட 200 கிராம் பிரவுன் சுகர் மதிப்பு ரூ.30 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்புள்ளது என்பது குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow