திமுகவுடன் கூட்டணியா? – சூசகமாக சொன்ன தமிழிசை சௌந்தரராஜன்!
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக – திமுக கூட்டணி உருவாகிறதா என்பது குறித்து தமிழிசை சௌந்தரராஜன் பேசியுள்ளது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த 2007 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பாஜக அலுவலகம் திமுகவினரால் தாக்கப்பட்ட வழக்கு 17 வருடங்களாக நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த இந்த வழக்கின் விசாரணைக்கு சாட்சி ஆதாரமாக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
வழக்கு விசாரணை முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது. மேலும் இது நடந்ததற்கான சாட்சியங்களை நீதிமன்றத்தில் கூறியதாகவும், திமுக மாற வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், திமுக என்றாலே வன்முறை தான் எனவும் தெரிவித்திருந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், கலைஞர் நாணயம் வெளியிடும் விழாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் சார்பில் அனைவரும் பங்கேற்றது குறித்து பதில் அளித்திருந்தார்.
அதில், ”எதிர்மறை அரசியல் இல்லாமல் நேர்மறை அரசியல் இருக்க வேண்டும். திமுக பாஜக கூட்டணி குறித்து இப்போது சொல்ல முடியாது தேர்தல் நேரத்தில் தான் சொல்ல முடியும்.
அரசு விழாவில் இருவர் வந்தாலே கூட்டணி என்று சொல்லிவிட முடியாது. கூட்டணி என்பது அரசியல் நிகழ்வுகளை பார்த்து தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பது. அதை இப்போதே சொல்ல முடியாது. திமுகவுடன் கூட்டணி வேண்டாமா என்பது குறித்து நாங்கள் சொல்ல முடியாது” எனத் தெரிவித்தார்.
தமிழிசை சௌந்தரராஜனின் இந்த கூட்டணி குறித்த பேச்சு, தற்போதைய திமுக கூட்டணி கட்சிகளுக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காரணம், பாஜகவின் ஒட்டுமொத்த கொள்கையையும் எதிர்த்து சமூகநீதி கட்சிகளை ஒன்றிணைத்து கூட்டணி அமைத்துள்ளதாக சொல்லும் திமுக, எவ்வாறு பாஜகவுடன் கூட்டணி வைக்க முடியும் என்ற கேள்விகளை அரசியல் விமர்சகர்கள் எழுப்பி வருகின்றனர். இதுகுறித்து அறிவாலய வட்டாரங்கள் மறுப்பு தெரிவித்தாலும், திமுகவை கூட்டணியில் இணைப்பதற்கு பாஜக பெரும் ஆர்வம் காட்டுவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
What's Your Reaction?






