Tamannaah: அக்ரிமெண்ட் டைம் முடிந்தும் விளம்பரம்... பிரபல நகை கடைக்கு எதிராக தமன்னா வழக்கு!

பிரபல நகை கடைக்கு எதிராக நடிகை தமன்னா தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், சம்பந்தப்பட்ட நிறுவனம் பதில் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Aug 20, 2024 - 17:10
Aug 21, 2024 - 10:15
 0
Tamannaah: அக்ரிமெண்ட் டைம் முடிந்தும் விளம்பரம்... பிரபல நகை கடைக்கு எதிராக தமன்னா வழக்கு!
உயர்நீதிமன்றத்தில் தமன்னா வழக்கு

சென்னை: பான் இந்தியா நடிகையாக வலம் வரும் தமன்னா, ஏராளமான விளம்பரங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். சினிமாவில் அறிமுகமாகும் முன்பும் விளம்பரங்களில் நடித்தே பிரபலமானவர் தமன்னா. அதன்பின்னர் தான் கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல மொழிகளிலும் ஹீரோயினாக நடிக்கத் தொடங்கினார். இந்நிலையில், பிரபல நகைக்கடை நிறுவனமான அட்டிகா கோல்ட் நிறுவனத்தின் விளம்பர மாடலாக தமன்னா நடித்திருந்தார். இதன் ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் தனது விளம்பரத்தை, அந்நிறுவனம் பயன்படுத்தி வருவதாகவும், அதற்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் தமன்னா வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஒப்பந்த காலம் முடிந்து விட்டதால், அட்டிகா கோல்டு பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தமன்னாவின் விளம்பரங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். ஆனால், நீதிமன்ற தடை உத்தரவிற்குப் பிறகும் தனது விளம்பரத்தை அட்டிகா கோல்டு நிறுவனம் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனையடுத்து அட்டிகா நிறுவனத்திற்கு எதிராக தமன்னா சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தார். அப்போது நகைக்கடை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணகுமார், தங்கள் நிறுவன தரப்பில் மனுதாரரின் விளம்பரத்தை நிறுத்தி விட்டதாகவும், ஆனால் வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் எங்களின் பழைய விளம்பரங்களை தனிநபர் பயன்படுத்துவதற்கு தாங்கள் எந்த வகையிலும் பொறுப்பேற்க முடியாது எனவும் வாதிட்டார். இதனையடுத்து தமன்னாவின் மனுவிற்கு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 2 தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் படிக்க - மணிரத்னத்தை மறைமுகமாக அட்டாக் செய்தாரா பா ரஞ்சித்..?

இதேபோல் பவர் சோப் நிறுவனத்தின் மாடலாக பயன்படுத்திய விளம்பர ஒப்பந்தத்தை மீறி, தமது விளம்பரங்களை அந்த நிறுவனம் பயன்படுத்துவதாகவும், இதற்கும் தடை விதிக்க வேண்டும் எனவும் நடிகை தமன்னா உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி, நடிகை தமன்னாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார் தமன்னா. இந்த வழக்கு நீதிபதிகள் எம் சுந்தர், திலகவதி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. எதிர் மனுதரார் நிறுவனம் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை. இதனால் இந்த வழக்கை செப்டம்பர் 12ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow