'எனக்கும் இந்த பணத்திற்கு சம்பந்தமில்லை' - ரூ.4 கோடி பறிமுதல் வழக்கில் நயினார் நாகேந்திரன் அதிரடி
MLA Nainar Nagendran : சிபிசிஐடி போலீசார் நயினார் நாகேந்திரனிடம் 250க்கும் மேற்பட்ட கேள்விகளை கேட்டு பதில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என சிபிசிஐடி காவல்துறையிடம் தெரிவித்துவிட்டதாக நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
MLA Nainar Nagendran : நெல்லை எக்ஸபிரஸ் ரயிலில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக பாஜக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரனிடம் சிபிசிஐடி போலீசார் 7 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தினர்.
கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்க பறக்க மலை போலீசார் தீவிரமாக பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த சூழலில், ஏப்ரல் 6 ஆம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் மூலம் நான்கு கோடி ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்டதை தனிப்படை போலீசார் சோதனையில் சிக்கியதை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசிற்கு மாற்றப்பட்டது.
பிடிபட்ட நபர்கள் மூன்று பேரும் நயினார் நாகேந்திரன் சொந்தமான ஹோட்டலில் வேலை பார்த்தவர்கள் என்று தெரியவந்தது. அதன் அடிப்படையில் நான்கு கோடி ரூபாய் பணம் எடுத்து செல்லப்பட்டவர்களுக்கும், நயினார் நாகேந்திரனுக்கு தொடர்பு இருப்பதாக கருதி, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி 3 முறை நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஜடி போலீசார் சம்மன் அனுப்பினர். பல்வேறு காரணங்களால் வர முடியாத நயினார் நாகேந்திரன் முதல் முறையாக இன்று சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் ஆஜரானார்.
இன்று செவ்வாய்கிழமை [16-07-24] காலை 10.20 மணிக்கு நயினார் நாகேந்திரன் சிபிசிஐடி அலுவலகத்திற்கு விசாரணைக்கு நேரில் ஆஜரானார். இதனைத் தொடர்ந்து 11:20 க்கு நெல்லை பாராளுமன்ற பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு இருந்த நீலம் முரளி யாதவ் மற்றும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஹோட்டலில் பணிபுரியும் ஊழியர் மணிகண்டன் ஆகியோரும் நேரில் ஆஜரானார்கள்.
சரியாக 12 மணியளவில் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜியும் சிபிசிஜடி அலுவலத்திற்கு ஆஜராகி சுமார் 30 நிமிடம் விசாரணைக்கு பின்பு புறப்பட்டு சென்றார். முன்னதாக இந்த வழக்கில் பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.
இவர்களிடம் 190க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்டுள்ள நிலையில் நயினார் நாகேந்திரனிடம் 250க்கும் மேற்பட்ட கேள்விகளை சிபிசிஐடி போலீசார் கேட்டு பதில் பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
விசாரணையை முடித்து விட்டு வெளியே வந்த நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழகத்தில் கொலைகள்,கொள்ளைகள் அதிகப்படியாக நடக்கிறது. அதை ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் 4 கோடி செய்தியை 4 மாதமாக போடுகிறார்கள். அந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துவிட்டேன். இந்த பணம் எப்படி வந்தது என கேட்டார்கள், எனக்கும் இந்த பணத்திற்கு சம்பந்தமில்லை என தெரிவித்துவிட்டேன். நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். யாரோ கொண்டு வந்த பணத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை. தனது மகன் சும்மா பார்க்க வந்தார்" என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் அடுத்தக்கட்ட விசாரணை நடைபெறுமா? அல்லது தற்போது விசாரணையில் கிடைத்த தகவல் அடிப்படையில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்வார்களா? என்பதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
What's Your Reaction?