முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை? அடுத்தக்கட்டத்திற்கு தயாரான த.வெ.க... விஜய் போடும் மாஸ்டர் பிளான்!

TVK Conference: தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு விரைவில் நடைபெற உள்ள நிலையில், கட்சியில் வலிமையான இரண்டாம் கட்ட தலைவர்களை உருவாக்க வேண்டும் என்று தவெக தலைவர் விஜய் கணக்கு போட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விரிவாக இந்த செய்தி தொகுப்பில் பார்ப்போம். 

Sep 5, 2024 - 07:09
Sep 5, 2024 - 17:28
 0
முக்கிய தலைகளுடன் மறைமுக பேச்சுவார்த்தை? அடுத்தக்கட்டத்திற்கு தயாரான த.வெ.க... விஜய் போடும் மாஸ்டர் பிளான்!

திமுக, அதிமுக, பாஜக, நாதக என நான்கு முக்கிய கட்சிகளைத் தாண்டி தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தை நிலை நிறுத்தவேண்டும் என்றால் திரை பிம்பம் மட்டும் போதுமானதல்ல என்பதை விஜய் நன்குணர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அந்தவகையில், கட்சியில் முதற்கட்ட தலைவர்கள் தொடங்கி அடிப்படை உறுப்பினர்கள் வரை ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செய்துக் கொண்டிருக்கிறார் விஜய். 

என்னத்தான் தவெக என்ற புதியக்கட்சி தொடங்கி இருந்தாலும், அரசியல் விஜய்க்கு புதிதல்ல. திமுகவிற்கு ஆதரவாகவும், அதிமுகவிற்கு ஆதரவாகவும் சட்டமன்ற தேர்தல்களில் விஜய் மக்கள் இயக்கம் களப்பணியாற்றி இருந்தது. அதோடு உள்ளாட்சி தேர்தலில் திராவிட கட்சிகளுக்கே ஷாக் கொடுக்கும் அளவிற்கு குறிப்பிடத்தக்க சதவிகித வாக்குகளை பெற்றிருந்தது விஜய் மக்கள் இயக்கம். அரசியல் கட்சி தொடங்காமலே, திராவிட கட்சிகளுக்கு டஃப் கொடுத்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், தற்போது கட்சி தொடங்கியபிறகு சும்மாவா இருப்பார்கள்.. கட்சியில் முக்கிய பதவி, தலைவருடன் நெருக்கம் என அடுத்தக்கட்டத்தை நோக்கி நகர தொடங்கிவிட்டனர். 

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர்கள் நியமனம் மிகத் தீவிரமாக அரங்கேறிவருவதாகக் கூறப்படுகிறது. திராவிட கட்சிகளில் மா.செ பதவி என்பது மிக முக்கியமானவை... அது மாவட்டத்தின் முதலமைச்சர் போன்றது... தொகுதியை தாண்டி மாவட்டம் முழுவதும் செல்வாக்கு பெற்றுவிட்டால், கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் அமைச்சராகினால் கூட ஆச்சரியமில்லை... அதனால் மாவட்டச் செயலாளர் பதவிக்கு டிமாண்ட் அதிகமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட நிர்வாகிகளே மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்படலாம் என்று சொல்லப்பட்டாலும், முன்பு கூறியதுபோலவே மா.செ டூ அமைச்சர் பதவிக்காக கணக்கு போட்டு பலரும் போட்டியில் இறங்கியுள்ளதாக தவெக வட்டாரத்தில் பேசப்படுகிறது. 

ஒருபக்கம் மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு கடும்போட்டி நிலவிவரும் நிலையில், திராவிட கட்சிகளில் எப்படி முதன்மைகழக நிர்வாகிகள் இருக்கிறார்களோ, அதேபோன்று தவெகவின் முதன்மை கழக நிர்வாகிகளை நியமிக்கும் வேலைகளிலும் தலைவர் விஜய் இறங்கிவிட்டாராம். 

அதன் முதற்கட்ட நடவடிக்கையாக மூத்த அதிகாரிகள், எழுத்தாளர்கள், சிறிய கட்சிகளின் முக்கிய பிரதிநிதிகள் என அனைவரிடமும் மறைமுக பேச்சுவார்த்தை நடத்த தூதுவிடப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

முதலாவதாக இந்த லிஸ்டில் இருப்பது, நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என மக்களிடம் நன்மதிப்பை பெற்றதோடு, அவர் அரசியல் வரவேண்டும் என்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அணிவகுத்து அரசியலுக்கு அழைக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ் தான். ரஜினி கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு வெளியான சமயத்தில், ரஜினி கட்சியில் சகாயம் ஐ.ஏ.எஸ் இணைவார் என்று கூறப்பட்டது. ஆனால், ரஜினி கட்சி ஆரம்பிக்காததால் சகாயத்தின் அரசியல் பயணம் குறித்தான பேச்சு பெரியளவில் வெளியில் வரவில்லை. இந்த நிலையில், விஜய் கட்சித் தொடங்கி மாநாடே நடத்த உள்ளதால், சகாயம் ஐஏஎஸ் தவெகவில் இணைய வாய்ப்புகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. கட்சி பதவி அல்லாமல், விஜய்க்கு தனிப்பட்ட ஆலோசகராக நியமனம் செய்யப்படலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். விரைவிலேயே சகாயத்திடம் விஜய் பேச்சுவார்த்தை நடத்தபடலாம் என்றும் கூறுகின்றனர். 

சகாயத்தை தொடர்ந்து, எழுத்தாளரும் சாகித்ய அகாதமி விருதாளருமான மூத்த ஐஏஎஸ் அதிகாரி மு.ராஜேந்திரனிடமும் பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழக வரலாற்றுகால செப்பேடுகளை ஆய்வு செய்தல், ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகளின் பிரதிகளை தேடியெடுத்து தொகுத்தல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வரும் ராஜேந்திரனையும் விஜய்யின் தனிப்பட்ட ஆலோசகராக நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவரிடமும் விரைவிலேயே பேச்சுவார்த்தை நடத்தபடலாம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். 

மூத்த அதிகாரிகளை தாண்டி, முக்கிய கட்சிகளின் நிர்வாகிகளுடனும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம். அமமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான காளிமுத்துவின் மகனுமான டேவிட் அண்ணாதுரையை தவெகவில் இழுக்க முயற்சிகள் நடந்துவருகிறதாம். டேவிட் அண்ணாதுரை அமமுகவில் நின்று வெற்றி பெற முடியவில்லை என்றாலும், 2019 தேர்தலில் 85 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்ற டேவிட் அண்ணாதுரைக்கு, தந்தையின் செல்வாக்கு இன்றளவும் கைக்கொடுக்கிறது. 

அதே போல் திமுகவின் மூத்த உறுப்பினரும், திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ மற்றும் மதுரை மேயராக பதவி வகித்த செ.ராமச்சந்திரனையும் அணுக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் மிகத்தீவிரமாக செயல்பட்டு வந்த இவர், அரசியலில் இருந்து விலகி இருந்தார். 2019 மக்களவைத் தேர்தலில் மீண்டும் களத்தில் இறங்கி திமுக கூட்டணிக்கு வாக்கு சேகரித்தார். அதன்பிறகு கட்சியில் அமைதிக்காத்து வருகிறார். என்னத்தான் அவர் அரசியலில் இருந்து விலகி இருந்தாலும் அவருக்கான செல்வாக்கு இன்றளவும் இருந்து வருகிறது என்பது நிதர்சனமே. ஆதலால், அவரையும் கட்சிக்குள் இழுக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகவும், ஒருவேளை அவர் ஒப்புக்கொண்டால் தவெகவின் மதுரை மாவட்டச் செயலாளராக அவர் நியமனம் செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

முதன்மை கழக நிர்வாகிகளுக்கான பணிகளும், மாவட்டச் செயலாளர்கள் நியமனப்பணிகளும் ஒருசேராக நடந்துவருவதால், தவெக கூடாரமே பரபரப்பாக இருந்துவருகிறது. இவற்றையெல்லாம் தாண்டி, பல முன்னணி நடிகர்களும் குறிப்பாக அரசியல் கட்சித் தொடங்கிய நடிகர்களின் வாரிசுகள் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய வாய்ப்புள்ளதால், அவர்களுக்கும் பதவிகள் வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது. 

வழக்கறிஞர் பிரிவு, மருத்துவ பிரிவு, மகளிர் அணி, என முக்கிய பிரிவுகளுக்கும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுவிட்டதாகவும், மாநாட்டில் இதுகுறித்தான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று தகவல்கள் கசிந்துள்ளன. மாநாட்டிலேயே சில முக்கிய நபர்கள் தவெகவில் இணையலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

மாநாட்டை நடத்துவதில் ஏற்பட்டுள்ள சிக்கலை சரிசெய்வதில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிஸியாக இருந்துவருவதால், இதில் அவர் தலையிடாமல் இருக்கிறாராம். ஒருவேளை அவர் இதில் தலையிட்டால், அவருடைய ஆதரவாளர்களுக்கும் பதவிகள் கொடுக்கப்படலாம் என்று தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

எது எப்படியோ, தவெக மாநாட்டில் என்ன நடக்கப்போகிறது என்பதை செப்டம்பர் 23 வரை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow