4 படுகொலைகள்.. இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்

Premalatha Vijayakanth on DMK Government : தமிழ்நாட்டில் ஒரே நாளில் அடுத்தடுத்து நிகழ்ந்துள்ள கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி திமுக அரசை தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக சாடியுள்ளார். ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளது, இது தமிழ்நாடா இல்லை கொலை நாடா என்றும் தமிழக அரசுக்கு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Jul 29, 2024 - 11:11
Jul 29, 2024 - 13:17
 0
4 படுகொலைகள்.. இது தமிழ்நாடா? இல்லை கொலை நாடா? கொந்தளித்த பிரேமலதா விஜயகாந்த்
Premalatha Vijayakanth on DMK Government

Premalatha Vijayakanth on DMK Government : தமிழகத்தில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமையில் ஒரே நாளில் அடுத்தடுத்து 4 படுகொலை சம்பவங்கள் நடைபெற்றது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தமிழ்நாடா இல்லை கொலை நாடா என்று கேள்வி எழுப்பியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.அதிகரிக்கும் படுகொலைகளால் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளதாக சாடியுள்ளார் பிரேமலதா விஜயகாந்த்.

சிவகங்கை மாவட்டம் வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்தவரும் பாஜக நிர்வாகியுமான செல்வக்குமாரை பைக்கில் வந்த கும்பல் வெட்டி படுகொலை செய்தது.
அதேபோல, கடலூர் திருப்பனம்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகர் பத்மநாதன், திருவட்டாறில் காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் ஜாக்சன், தரும்புரியில் காதல் விவகாரத்தில் பிரியாணி கடைக்குள் இளைஞர் படுகொலை என கடந்த 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 கொலை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த படுகொலை சம்பவங்கள் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். எனினும் அடுத்தடுத்த கொலை சம்பவங்கள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், தமிழ்நாட்டில் நடைபெற்ற அடுத்தடுத்த கொலை சம்பவங்களை சுட்டிக்காட்டி தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் காட்டமாக சாடியுள்ளார். ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளது, இது தமிழ்நாடா இல்லை கொலை நாடா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரியில் ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிரபல பிரியாணி கடைக்குள் புகுந்த 4 பேர் கொண்ட கும்பல், அங்கிருந்த ஊழியரைச் சரமாரியாக வெட்டிக் கொன்றது. தொடர்ந்து, சிவகங்கை அருகே பாஜக பிரமுகர் செல்வகுமார் நேற்றிரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

கடலூர் அருகே அதிமுக நிர்வாகி பத்மநாதன் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, குமரி அருகே காங்கிரஸ் கவுன்சிலரின் கணவர் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைப் பார்க்கும்போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுப் போய்விட்டது. கொலை செய்வது சர்வ சாதாரணமாகிவிட்டது. புதிதாகப் பதவியேற்ற டிஜிபி திரு அருண் அவர்கள், உடனடியாக இது போன்ற படுகொலைகள் தடுக்கப்படும் என்றும், ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொன்னால் தான் புரியும் என்று கூறினார். ஆனால் இன்று வரை எதுவும் தடுக்கப்படவும் இல்லை, ரவுடிகளுக்கு எதுவும் புரிந்ததாகவும் தெரியவில்லை. இன்னும் படுகொலைகள் அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. இதையெல்லாம் பார்க்கும்போது சட்டம் ஒழுங்கு மிகப் பெரிய சீர்கேடாக மாறி இருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

டாஸ்மாக் கஞ்சா போதை வஸ்துக்கள் பயன்பாடு அதிகமாக இருப்பது தான் இதற்கு மிக முக்கிய காரணம். தேமுதிக இதை வன்மையாகக் கண்டிக்கிறது எனவே தமிழக அரசு இதைக் கவனத்தில் கொண்டு போதை இல்லா தமிழகத்தை உருவாக்கவும், தமிழ்நாடு ஒரு கொலை நாடாக மாறாமல் இருக்க உடனடியாகத் தக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேமுதிக சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow