விளையாட்டு

டெஸ்ட் போட்டியா, டி20 போட்டியா?.. காட்டடி அடித்த பென் ஸ்டோக்ஸ் சாதனை

Ben Stokes Fastest Half Century : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 3ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

டெஸ்ட் போட்டியா, டி20 போட்டியா?.. காட்டடி அடித்த பென் ஸ்டோக்ஸ் சாதனை
டெஸ்ட் போட்டிகளில் அதிவேக அரைசதம் அடித்த பென் ஸ்டோக்ஸ்

Ben Stokes Fastest Half Century : இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த போட்டியோடு, பிரபல நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, நாட்டிங்காமில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணி 241 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இதனையடுத்து 3ஆவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி பிர்மிங்காமில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது.

இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 282 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகப்பட்சமாக கேப்டன் கிரைக் பிராத்வைட் 61 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 59 ரன்களும், ஜோஸ்வா டா சில்வா 49 ரன்களும் எடுத்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் கஸ் அட்கின்ஸன் 4 விக்கெட்டுகளையும், கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும், மார்க் வுட் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பின்னர், களமிறங்கிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 376 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, டெஸ்ட் போட்டியில் தனது கன்னி சதத்தை பதிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஜாமி ஸ்மித் 95 ரன்களும், ஜோ ரூட் 87 ரன்களும், கிறிஸ் வோக்ஸ் 62 ரன்களும், பென் ஸ்டோக்ஸ் 54 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்த போட்டியின் மூலம், இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 12,000 ரன்களை கடந்து சாதனை படைத்தார். மேலும், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா எடுத்திருந்த 11,953 ரன்களை அந்த நாட்டிற்கு எதிரான போட்டியிலேயே கடந்தார். மேலும், டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 8ஆவது இடத்தை பிடித்தார்.

பின்னர் 94 ரன்கள் பின்தங்கிய நிலையில், தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் ஓவரிலேயே, தங்களது முதல் விக்கெட்டை இழந்தது. 175 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக மிக்கெய்ல் லூயிஸ் 57 ரன்களும், கெவன் ஹோட்ஜ் 55 ரன்களும், எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் 7 வீரர்கள் ஒற்றை இலக்கத்தையே தாண்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணி தரப்பில் மார்க் வுட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 82 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. வழக்கமாக நடு வரிசையில் களமிறங்கும் பென் ஸ்டோக்ஸ் தொடக்க வீரராக களமிறங்கினார். அதற்கு காரணம் இல்லாமலும் இல்லை என்பது அவரது ஆட்டம் காண்பித்தது.

பென் ஸ்டோக் மற்றும் பென் டக்கெட் இருவரும் தொடக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களை கதற விட்டனர். இதனால், இங்கிலாந்து அணி 4.2 ஓவர்களிலேயே 50 ரன்கள் எடுத்து தனது முந்தைய சாதனையை சமன் செய்தது. மேலும், பென் ஸ்டோக்ஸ் டி20 போல வாண வேடிக்கை காட்டினார்.

இறுதியில் 7.2 ஓவர்களில் இங்கிலாந்து அணி 87 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் 28 பந்துகளில் [9 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்] 57 ரன்களும், பென் டக்கெட் 16 பந்துகளில் [4 பவுண்டரிகள்] 25 ரன்களும் எடுத்தனர்.

பென் ஸ்டோக்ஸ் சாதனை:

இந்த போட்டியில் பென் ஸ்டோக்ஸ் 24 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் இங்கிலாந்து அணிக்காக குறைந்த பந்துகளில் அரைச்சதம் அடித்தவர் என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக, 1981ஆம் ஆண்டு இங்கிலாந்து முன்னாள் வீரர் இயன் போத்தம் 28 பந்துகளில் 50 ரன்கள் எடுத்திருந்தார்.

சர்வதேச அளவில் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்தவர்கள் பட்டியலில் பாகிஸ்தானின் மிஸ்பா உல் ஹக் முதலிடத்தில் உள்ளார். 2014ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அவர் 21 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.

அவருக்கு அடுத்தபடியாக டேவிட் வார்னர் 2017ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். மூன்றாவது இடத்தில் ஜாக் காலிஸ் 2005ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் 34 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்.