நிரம்பியது மேட்டூர் அணை..43வது முறையாக 120 அடியை எட்டியது..காவிரியில் தெறி வெள்ளம்

Mettur Dam Water Level Full Capacity : மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் 16 கண் உபரி நீர் போக்கியில் காலை 7 மணி முதல் தண்ணீர் திறப்பு 60 ஆயிரம் கன அடியில் இருந்து 78,500 கன அடியாக திறக்கப்படுகிறது.காலை 800 மணி முதல் அணையில் இருந்து 1.03 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்படுவதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Jul 31, 2024 - 07:31
Jul 31, 2024 - 12:05
 0
நிரம்பியது மேட்டூர் அணை..43வது முறையாக 120 அடியை எட்டியது..காவிரியில் தெறி வெள்ளம்
Mettur Dam Water Level Full Capacity

Mettur Dam Water Level Full Capacity : மேட்டூர் அணை 43வது முறையாக தனது முழு கொள்ளவான 120 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் உபரி நீராக வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 1 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்படுவதால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை நடப்பாண்டு அபரிமிதமாக பெய்து வருவதால் தமிழ்நாட்டில் உள்ள ஆறுகள் உயிர்பெற்று ஓடுகின்றன. அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டுகிறது. அனைத்து அணைகளும் நிரம்பி வழிகின்றன. உபரிநீர் திறக்கப்பட்டு வருவதால் பெருவெள்ளம் பெருக்கெடுத்து விவசாயிகளை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. 


நிரம்பிய அணைகள்:

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக, கர்நாடக அணைகள்  நிரம்பி வழிகின்றன. அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியதையடுத்து காவிரியில் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. மேட்டூர் அணை மளமளவென நிரம்பி கடந்த 27ஆம் தேதி 100 அடியை 71வது முறையாக எட்டியது. பின்னர், அணையின் நீர் மட்டம் 110.76 அடியை எட்டியபோது, டெல்டா பாசனத்துக்கு கடந்த 28ம் தேதி நீர் திறந்து விடப்பட்டது. 

120 அடியை எட்டிய மேட்டூர் அணை

அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி அளவில் எட்டியது. மேட்டூர் அணை வரலாற்றில் 43வது தடவையாக நீர்மட்டம் 120 அடியை எட்டி சாதனை படைத்தது. இதையடுத்து, எச்சரிக்கை ஒலி எழுப்பட்டு, மேட்டூர் அணையின் உபரி நீர் போக்கியான 16 கண் மதகு வழியாக விநாடிக்கு 60,000 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ம் தேதி அணை 120 அடியாக இருந்தது. அதன் பின்னர், இன்று மீண்டும் அணை முழு கொள்ளவான 120 அடியை எட்டியது. 

உற்சாகத்தில் விவசாயிகள்

கடந்த 2022ம் ஆண்டுக்கு பிறகு, மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது, டெல்டா பாசன விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.16 கண் மதகு வழியாக நீர் திறக்கப்பட்டதை அறிந்த சுற்றுவட்டார மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து கடல் போல காட்சி அளிக்கும் மேட்டூர் அணையை ஆர்வமுடன் கண்டு ரசித்து செல்கின்றனர். உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டுள்ளதால், மேட்டூர், பூலாம்பட்டி உள்ளிட்ட காவிரி கரையோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி, வருவாய்துறையினர் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர். 

பெருக்கெடுத்த புது வெள்ளம்:

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு கடந்த 28ம் தேதி விநாடிக்கு 12,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. பின்னர், திங்கள்கிழமை மாலை முதல் 23,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை முதல் 21,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அணைக்கு நேற்று மாலை விநாடிக்கு 54,459 கன அடியாகவும், நீர்மட்டம் 120 அடி, நீர் இருப்பு 93.47 டிஎம்சியாக இருந்தது. 16 கண் மதகு வழியாக, 60,000 கன அடியும், நீர் மின் நிலையம் வழியாக 21,500 கன அடி என மொத்தமாக காவிரி ஆற்றில் 81,500 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனிடையே நீர் வரத்து படிப்படியாக உயர்ந்து இன்று காலை 6 மணி மணி நிலவரப்படி   98 ஆயிரம் கன   அடியாக  தண்ணீர் வந்து  கொண்டிருக்கிறது இந்தத் நீர்வரத்து இன்று மாலைக்குள் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

16வது நாளாக குளிக்க தடை 

காவிரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வருவதால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் பரிசல் பயணம் செய்யவும் விதிக்கப்பட்ட தடையானது 16வது நாள் தொடர்ந்து நீடிக்கிறது.  வருவாய்த்துறை தீயணைப்பு துறை போலீசார், ஊர்க்காவல் படையினர் காவிரி கரையோர பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர்.

1 லட்சம் கனஅடி தண்ணீர்

காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்தை  கர்நாடகா தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள்  தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
நீர்இருப்பு 93.47 டிஎம்சியாக உள்ளது.பாசன தேவைக்காக அணை மற்றும் சுரங்க மின் நிலையம் வழியாக வினாடிக்கு 21,500 கன அடியும், 16 கண் மழை கால வெள்ள நீர் போக்கியில் 60,000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.காலை 800 மணி முதல் அணையில் இருந்து 1.03 லட்சம் கன அடி தண்ணீர் திறக்கப்பட உள்ளதாக நீர்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow