5 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம்.. கொரியர் மோசடிக்காரர்கள் சிக்கியது எப்படி?...
Chennai Police Found Fedex Courier Scammers : சென்னையை சேர்ந்த பெண்ணிடம் 3.60 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கைதானவர்கள் வங்கி கணக்கில் 5 கோடி பணப்பரிமாற்றம் நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
Chennai Police Found Fedex Courier Scammers : மயிலாப்பூரைச் சேர்ந்த இந்து என்ற பெண்மணியிடம் ஃபெடெக்ஸ் கொரியரில் [Fedex Courier] இருந்து பேசுவதாக கூறி மோசடி செய்துள்ளனர். அவரிடம் இருந்து மூன்று லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏமாற்றியுள்ளதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகாரில் ஃபெடெக்ஸ் கொரியரில் இருந்து பேசும் நபர், தனது ஆதார் எண்ணை பயன்படுத்தி சட்டவிரோத பொருட்கள் பார்சல் அனுப்பப்படுவதாக கூறி பேசியதாக இந்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மும்பை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள இருக்கிறார்கள் என கூறியதாகவும் தெரிவித்துள்ளார். சிறிது நேரத்திற்கு பிறகு சைபர் க்ரைம் போலீசார் என கூறிக்கொண்டு இந்துவிடம் தொடர்ந்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஸ்கைப் கால் மூலமாக வீடியோ காலில் பேசிக் கொண்டே டிஜிட்டல் அரெஸ்ட் செய்ததாகவும் தெரிவித்துள்ளார் இந்த வழக்கிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால், உங்கள் வங்கி கணக்கில் உள்ள பணம், கணக்கில் காட்டப்பட்ட பணம் என்பதை நிருபீக்க, தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு பணத்தை அனுப்பி வைக்குமாறு கூறியுள்ளனர்.
பணம் குறித்து ஆய்வு செய்து மீண்டும் பணத்தை திருப்பி அனுப்புவதாக கூறியதன் அடிப்படையில், இந்து தன்னிடம் இருக்கும் 3,64,000 ஆயிரம் ரூபாய் பணத்தை போலிஸ் அதிகாரி போல் பேசிய நபர் தெரிவித்த வங்கி கணக்கிற்கு அனுப்பியதாக புகாரில் தெரிவித்துள்ளார். நீண்ட நாட்களாகியும் பணம் மீண்டும் வராததால், இதுகுறித்து விசாரணை செய்தபோதுதான் தான் ஏமாற்றப்பட்டது அறிந்ததாக புகாரில் தெரிவித்துள்ளார்
இந்த புகார் தொடர்பாக சென்னை கிழக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்துவிடம் இருந்து பணம் சென்ற வங்கி கணக்கை ஆய்வு செய்தபோது கேரளாவில் வங்கி கணக்கில் இருப்பது தெரியவந்துள்ளது. வங்கி கணக்குகளின் தகவல்களைப் பெற்று அதில் இணைக்கப்பட்டுள்ள செல்போன் என் மூலமாக தொடர்புடைய நபர்களின் லொகேஷனை சென்னை சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.
கேரளாவிற்கு விரைந்த சென்னை தனிப்படை போலீஸார் செல்போன் நெட்வொர்க் மூலமாக இரண்டு பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்ட போது கார் சுத்தம் செய்யும் நிறுவனத்தில் பணி புரியும் நித்தின் ஜோசப் என்ற நபர் என தெரியவந்தது.
இவரிடம் விசாரணை மேற்கொண்ட போது ரமீஷ் என்பவர் திருமணம் ஒன்றில் பழக்கம் ஏற்பட்டதாகவும், தனது பணக்கஷ்டத்தை தெரிந்து கொண்டு உதவுவதாக தெரிவித்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக பணம் சம்பாதிப்பதற்கு வங்கி கணக்கு ஒன்றை துவங்கி கொடுத்தால் லட்ச லட்சமாக சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை காட்டியதாக கூறியுள்ளார்.
குறிப்பாக ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் விளையாட்டுகளில் விளையாடுபவர்களுக்கும் நிறுவனத்திற்கும் இடையே வங்கி பரிவர்த்தனைக்கு வங்கிக் கணக்குகள் தேவைப்படுவதாக கூறியதன் அடிப்படையில் தனது பெயரில் வங்கிக் கணக்குகளை ஆரம்பித்துக் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக ஒரு கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை செய்ய உதவினால் ஒரு லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் கமிஷனாக கிடைக்கும் என கூறி கடந்த சில மாதங்களாக தனது வங்கி கணக்குகள் மூலம் பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரமீஷ் என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது whatsapp மூலமாக லியோ என்ற நபர் தொடர்பு கொண்டதாகவும், இதுபோன்று ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளுக்கு வங்கிக் கணக்குகள் தேவைப்படுவதாகவும் அதற்கு ஆட்களை சேர்த்து வங்கிக் கணக்குகள் துவக்கி கொடுத்தால் 30 ஆயிரம் ரூபாய் கமிஷனாக கொடுப்பதாக லியோ கூறியதாகவும் ரமீஷ் தெரிவித்துள்ளார்.
இவ்வாறாக ரமீஷ் மற்றும் நித்தின் ஜோசப் ஆகிய இருவரும் ஆரம்பித்துக் கொடுத்த வங்கி கணக்குகள் மூலமாக 5 கோடி ரூபாய் பணம் பரிவர்த்தனை நடந்திருப்பதாக விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட நபர்களில் நித்தின் ஜோசப் வங்கி கணக்கை பெங்களூர் சைபர் கிரைம் போலீசார் வழக்கு ஒன்றில் முடக்கியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இருவரும் தங்கள் வங்கிக் கணக்கில் வரும் பணத்தை டாலராக மாற்றி லியோ என்ற நபருக்கு அனுப்பி வைத்ததாகவும் பதிலுக்கு கமிஷனாக டாலராகவே கொடுத்ததாகவும் கைதானவர்கள் தெரிவித்துள்ளனர். கைதானவர்கள் மணி மியுல்கள் என தெரியாமல் செயல்பட்டதாக தெரிபித்துள்ளனர்
கைது செய்யப்பட்ட இருவரின் வங்கி கணக்கை பயன்படுத்தி இந்தியாவில் நடந்த பல்வேறு சைபர் கிரைம் மோசடிக்கு பணப் பரிவர்த்தனைக்காக இந்த வங்கிக் கணக்குகள் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களைப் போல் வங்கி கணக்கு கொடுத்து உதவியவர்கள் யார்? யார்? எவ்வளவு வங்கி கணக்குகள் உள்ளன? என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?