சென்னையில் நில அதிர்வா..? வீதியில் குவிந்த பணியாளர்கள்.. பரபரப்பான சாலை
சென்னை அண்ணா சாலையில் உள்ள ஐந்து மாடி கட்டிடம் திடீரென குலுங்கியதால் அச்சமடைந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்தனர்.

சென்னை அண்ணா சாலையில் ஐந்து மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இங்கு செயல்பட்டு வரும் நிறுவனத்தில் நூற்றுக்கணக்கான பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று (பிப். 28) பணியாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வந்திருந்தனர். அப்போது நண்பகல் வேளையில் ஐந்து மாடி கட்டிடம் திடீரென குலுங்கியதாக கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த பணியாளர்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடி வந்த நிலையில் அண்ணா சலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள போலீஸார் இது உண்மையாகவே நில அதிர்வு தானா? அல்லது வதந்தியா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
சமீப காலமாக இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. அண்மையில், பீகார் மாநிலம் ஷிவான் மாவட்டத்தில் காலை 8.02 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது பூமிக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது என்றும் இது ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆகப் பதிவாகி இருக்கிறது என்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதேபோன்று தலைநகர் டெல்லியிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. இது பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவானது என்றும் இது ரிக்டர் அளவு கோலில் 4.0 ஆகப் பதிவாகி இருக்கிறது என்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் கட்டிடங்கள் குலுங்குவதை உணர்ந்து பாதுகாப்பான பகுதிகளில் தஞ்சம் புகுந்தனர்.
நிலநடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் பொருத்தப்பட்ட சிசிடிவி காட்சிகளில் கட்டடங்கள், மின்விளக்குகள், வீடுகள் குலுங்கும் காட்சி பாதிவாகிய நிலையில் அது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. மேலும், மக்கள் அனைவரும் அமைதியாக இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார்.
இவ்வாறு பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருவதால் வரும் காலங்களில் சென்னையிலும் நில நடுக்கம் ஏற்படும் வாய்ப்பு இருக்குமோ என்ற அச்சத்தில் மக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
What's Your Reaction?






