சென்னை அண்ணா நகர் அன்னை சத்யா நகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் ரவுடி ராபர்ட் என்ற சின்ன ராபர்ட். இவர் மீது கொலை வழக்கு உட்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த 26 -ஆம் தேதி இரவு ரவுடி ராபர்ட், அன்னை சத்யா நகர் முதல் தெரு வழியாக வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 6 பேர் ராபர்ட்டை வழிமறித்து மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கே.எம்.சி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.
தலை மற்றும் உடல் முழுவதும் பலத்த வெட்டு காயம் அடைந்த ரவுடி ராபர்ட்க்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் தகவல் அறிந்து அங்கு வந்த அண்ணா நகர் போலீஸார், ராபர்ட் உடலை கைப்பற்றிவழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் ரவுடி ராபர்ட் கூட்டாளியான கோகுல் என்பவரை கடந்த 2019-ஆம் ஆண்டு அயனாவரம் பகுதியைச் சேர்ந்த லோகு என்பவர் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்தார். இதன் காரணமாக லோகுவுக்கும் ரவுடி ராபர்டுக்கும் இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக லோகு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ராபர்ட்டை கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.
தொடர்ந்து, நடைபெற்ற விசாரணையில் ராபர்ட்னின் நண்பரான அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனை அந்த கும்பல் கொலை செய்ய வீட்டிற்கு சென்ற போது அவர் அங்கு இல்லாததால் அவரது தாய் புவனேஸ்வரியை வெட்டி விட்டு நேராக அண்ணாநகர் வந்து ராபர்ட்டை கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
அதுமட்டுமின்றி கொலையாளி லோகு கும்பலுக்கும் ராபர்ட்டின் கூட்டாளிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு இருதரப்பினரும் அயனாவரம் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை தீவைத்து எரித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து அண்ணாநகர் போலீஸார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய கொலையாளி லோகு மற்றும் அவனது கூட்டாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.
இதற்கிடையே கொலையாளி லோகு மற்றும் அவரது கூட்டாளிகள் ராபர்ட்டை கொலை செய்த பிறகு குரூப் படம் எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த படத்தை அடிப்படையாகக் வைத்து போலீஸார் ஆறு பேரை தீவிர தேடி வந்த நிலையில் நள்ளிரவு லோகு, சங்கர் பாய், தீபக், மோகன்லால், வெங்கடேசன், சிலம்பரசன், உள்ளிட்ட 6 பேரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீஸார் கொலை கும்பல் பதுங்கி இருந்த இடத்திற்கு சென்று அவர்களை கைது செய்ய முயன்றபோது முக்கிய குற்றவாளியான லோகு மற்றும் சங்கர் பாய் இருவரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்ற நிலையில் லோகுவுக்கு காலிலும், சங்கர் பாய்க்கு கையிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர் போலீஸார் இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவு கட்டு போட்டு சிகிச்சை அளித்து காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணைக்கு பின்னர் 6 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.