தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை வழக்கு: தவறாக நடந்து கொண்ட 3 வயது சிறுமி.. மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு

மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குழந்தையே தவறாக நடந்து கொண்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. 

பாலியல் வன்கொடுமை வழக்கு: தவறாக நடந்து கொண்ட 3 வயது சிறுமி.. மாவட்ட ஆட்சியர் சர்ச்சை பேச்சு
மாவட்ட ஆட்சியர் மகாபாரதி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 3 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அங்கன்வாடிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த 16 வயது சிறுவன் ஒருவன், குழந்தைக்கு சாக்லேட் வாங்கி கொடுத்து அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் குழந்தையை அருகில் உள்ள மறைவான இடத்திற்கு அழைத்து சென்று பாலியல் துன்புறுத்திலில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த குழந்தை கதறி அழுததும் ஆத்திரமடைந்த சிறுவன் குழந்தையின் தலை மற்றும் முகத்தில் கல்லால் தாக்கியுள்ளார். இதில், சிறுமியின்  கண் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து சிறுவன் தப்பிச் சென்றுள்ளார். இதற்கிடையே சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் குழந்தையின் பெற்றோர் தீவிரமாக தேடி உள்ளனர்.

அப்போது அங்கன்வாடிக்கு அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இருந்து  குழந்தையின் அழுகை சத்தம் கேட்ட நிலையில் அப்பகுதிக்கு சென்று பார்த்துள்ளனர். அங்கு சிறுமி பலத்த காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர சீர்காழி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மேல் சிகிச்சைக்காகப் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட 16 வயது சிறுவனை கைது செய்தனர். இந்நிலையில், மூன்று வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குழந்தையை தவறாக நடந்து கொண்டுள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அதாவது, மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு போலீசாருக்கு அறிவுரைகளை வழங்கி பேசினர்.

அப்போது மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பேசியதாவது, சீர்காழியில் கடந்த 24-ஆம் தேதி அங்கன்வாடிக்கு சென்ற மூன்று வயது சிறுமி, 16 வயது சிறார் குற்றவாளியால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குழந்தையே தவறாக நடந்து கொண்டிருக்கிறது. எனக்கு கிடைத்த ரிப்போர்ட்டின் படி அந்த குழந்தை சிறுவனின் முகத்தில் துப்பியுள்ளது. அதுதான் காரணம். எனவே, இரண்டு தரப்பிலும் பார்க்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். 

இதுபோன்ற விஷங்களை குழந்தைகளுக்கு சொல்லித் தருவது குறித்து பெற்றோர்களுக்கு உணர வைக்க வேண்டும் என சர்ச்சை ஏற்படுத்தும் விதத்தில் பேசினார். மூன்று வயது சிறுமி சிறுவனின் முகத்தில் துப்பியதுதான் பாலியல் வன்கொடுமைக்கு காரணம் என மாவட்ட ஆட்சியர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.