Mohan G : “சமூக அக்கறையோட பேசினது தப்பா..? போலீஸார் அப்படிலாம் பண்ணாங்க..” மோகன் ஜி குமுறல்!
Director Mohan G Arrest : பழனி கோயில் பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சையாக பேசியதால் இயக்குநர் மோகன் ஜி-ஐ போலீஸார் கைது செய்தனர். இதனையடுத்து ஜாமீனில் வெளியான மோகன் ஜி, தனது கைது சம்பவம் குறித்தும் பேட்டி கொடுத்துள்ளார்.

Director Mohan G Arrest : பழைய வண்ணாரப்பேட்டை, திரெளபதி, ருத்ர தாண்டவம், பகாசூரன் படங்களை இயக்கியவர் மோகன் ஜி. நாடக காதலுக்கு எதிராக படம் எடுப்பதாகக் கூறி பிரபலமான மோகன் ஜி, சமீபத்தில் பழனி பஞ்சாமிர்தம் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கினார். இதனால் போலீஸாரால் கைது செய்யப்பட்ட அவரை, திருச்சி 3-வது குற்றவியல் நீதிமன்றம் சொந்த ஜாமீனில் வெளியே விட்டது. இதனையடுத்து இயக்குநர் மோகன் ஜி, தனது வழக்கறிஞர் பாலுவுடன் பசுமைவழிச் சாலையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளித்தார்.
அதன்பின்னர் தனது வழக்கறிஞர் பாலுவுடன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய இயக்குநர் மோகன் ஜி-யின் வழக்கறிஞர் பாலு, போலீஸார் கைது செய்த போது அவரை உடை மாற்ற கூட நேரம் கொடுக்காமல் அழைத்துச் சென்றுள்ளனர். மேலும், எந்த வழக்கில் கைது செய்யப்படுகிறோம் என்பதை மோகன் ஜி-யிடம் போலீஸார் தெரிவிக்கவில்லை. கைது செய்த காவல்துறையினர் எந்த காவல் பகுதியைச் சேர்ந்தவர்கள்? என்று மோகன் ஜி மட்டுமில்லாமல் அவரது மனைவி, தாயாருக்கும் கூட தெரிவிக்காமல் கைது செய்துள்ளனர். நேற்று ஒருநாள் முழுவதும் காவல்துறையினரால் அச்சுறுத்தப்பட்டு, துன்புறுத்தப்பட்டு திருச்சி வரை எதற்காக அழைத்துச் செல்கிறோம் என்றும் காவல்துறையினர் கூறவில்லை.
முக்கியமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் போலீஸார் நடந்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த புகார் மனுவை மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் கொடுத்திருக்கிறோம். இந்த மனுவை விசாரித்து விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர். காவல்துறையினர் பற்றி மனித உரிமை ஆணையத்தில் புகார் கொடுத்தால், எங்களைப் பற்றியே புகார் கொடுக்கிறீர்களா? இன்னும் பல வழக்குகளை உங்கள் மீது போடுவோம் என்ற மனோபாவம் தான் காவல்துறையினர் மத்தியில் உள்ளது. மோகன் ஜி பேசிய வீடியோவை பாருங்கள், மிகுந்த விழிப்புணர்வுடன் பேசி இருப்பார். இப்படி ஒரு தகவல் செவி வழி செய்தி உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் அரசு கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறி இருப்பார். இப்படிக் கூட ஒருவர் சொல்லக்கூடாதா? காவல்துறையினர் அரசில் ஏவல்களாக இருக்கக் கூடாது என்றார்.
மேலும், சாராயக் கடைகள் என சொல்லப்படும் சந்து கடைகளை மூடுவது, கஞ்சா புழக்கத்தை தடுப்பது முதலிய முக்கியமான விஷயங்களில் காவல்துறை கவனம் செலுத்த வேண்டும். சமூக நல்லிணக்கத்தை கெடுக்க வேண்டும், பொது அமைதியை கெடுக்க வேண்டும், அரசுக்கு அவப் பெயர் கொடுக்க வேண்டும் என்ற ரீதியில் அவர் பேசினால் நடவடிக்கை எடுக்கலாம். அப்படி எதுவும் இல்லையே; சாதாரணமாக சமூக பொறுப்புடன் கூறிய விஷயம் தான் அது. நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வு மோகனுக்கு மன உளைச்சலையும் மனவேதனையையும் ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் வழக்குப் போட்டால் சட்ட ரீதியாக சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் ஆனால் காவல்துறையும் சட்டரீதியாக நடந்துகொள்ள வேண்டும் என பேசினார்.
அவரைத் தொடர்ந்து பேசிய இயக்குநர் மோகன் ஜி, என் குழந்தையை பள்ளியில் விட்டு வரும் வழியில் போலீஸார் என்னை கைது செய்தனர். அப்போது காவல்துறையினர் எதற்காக கைது செய்கிறோம் என என்னிடம் எதுவும் சொல்லவே இல்லை. முதலில் ராயபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்கிறோம் எனக் கூறிவிட்டு, திருச்சி வரை அழைத்துச் சென்றனர். அப்போது எனக்கு சாதகமாக எதுவும் நடக்கவில்லை. திருப்பதியில் நடந்த விஷயத்தை அங்கு உள்ள முதலமைச்சரே கூறினார். அதேபோல் தான் எனக்கு கிடைத்த செவிவழி செய்தி பற்றி உண்மையாக இருக்கக் கூடாது, அப்படி இருந்தால் நடவடிக்கை வேண்டும் என்ற அடிப்படையில் கூறினேன்.
நீதிமன்றத்தில் இந்த வழக்கு இருப்பதினால் அதை பற்றி பேச விரும்பவில்லை. ஆனால், சட்ட ரீதியாக இந்த வழக்கை சந்தித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன். நீதித்துறையின் மீது அதிக நம்பிக்கையுடன் இருப்பவன் நான், விழிப்புணர்வுக்காக தான் அப்படி பேசினேன் என இயக்குநர் மோகன் ஜி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?






