TVK Maanadu : தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ள நடிகர் விஜய், விரைவில் சினிமாவில் இருந்து விலகவுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் விஜய்யின் தி கோட் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து ஹெச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார் விஜய், இதுதான் அவரது கடைசிப் படம் என சொல்லப்படுகிறது. தளபதி 69 என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படம் அடுத்தாண்டு வெளியாகிறது. அரசியலுக்காக சினிமாவை தியாகம் செய்யும் விஜய், விரைவில் தனது கட்சியின் முதல் மாநாட்டை நடத்துவதற்கு ரெடியாகி வருகிறார்.
சில தினங்களுக்கு தவெக கொடியை அறிமுகம் செய்த விஜய், கட்சியின் முதல் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக உள்ளார். இந்த மாநாடு செப் 23ம் தேதி நடைபெறும் என சொல்லப்பட்டது. ஆனால், போலீஸார் தரப்பில் பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிகிறது. அதுமட்டும் இல்லாமல் தவெகவுக்கு 16 கேள்விகள் கேட்டிருந்த போலீஸார், மாநாடு நடக்க வேண்டும் என்றால் 33 நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியிருந்தனர். இதனையடுத்து தவெக மாநாட்டுக்கான புதிய தேதியை சமீபத்தில் விஜய் அறிவித்திருந்தார்.
அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு(TVK First Maanadu), அக்டோபர் 27ம் தேதி மாலை 4 மணிக்கு விக்கிரவாண்டி அருகே நடைபெறுகிறது. இந்த மாநாட்டுக்காக 100 ஏக்கருக்கு அதிகமான இடத்தை வாடகைக்கு எடுத்துள்ள தவெக, அங்கு தேவையான எல்லா ஏற்பாடுகளைம் செய்து வருகிறது. அதேபோல், மாநாடு குறித்து தவெக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் ஆகியோருடன் விஜய்யும் ஆலோசனை செய்ய உள்ளாராம். சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் நாளை இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் தவெக மாநாட்டுக்கு போலீஸார் தரப்பில் அனுமதி கொடுக்கவில்லை என தகவல்கள் வெளியாகின.
இதனையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் விளக்கம் கொடுத்துள்ளார். அதில், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாக வெளியான தகவல் தவறானது. ஏற்கனவே தவெக மாநாட்டுக்கு 33 நிபந்தனைகளுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் தவெக மாநாட்டுக்கு சட்ட ரீதியாக எந்த தடையும் இல்லை எனக் கூறப்படுகிறது, அதேநேரம் வடகிழக்குப் பருவமழை தீவிரம் ஆனால், தவெக மாநாடு திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.