சென்னை: கடந்த சில தினங்களுக்கு முன்னர் அசோக்நகர், சைதாப்பேட்டை பகுதிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் மகாவிஷ்ணு பேசியது சர்ச்சையானது. மாற்றுத்திறனாளிகளை காயப்படுத்தும் வகையில் அவர் பேசிய வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. இதனையடுத்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் சைதாபேட்டை காவல் நிலையத்தில் மகா விஷ்ணு மீது புகார் அளிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 7ம் தேதி ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை திரும்பிய மகாவிஷ்ணுவை சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
அவர் மீது கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவது, சமூகத்தில் வெறுப்பு கருத்துகள் பரப்புவது, பொது அமைதியை குலைக்கும் வகையில் பேசுவது, மதம் இனம் குறித்து தவறான தகவல்களை பரப்புவது, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட மகா விஷ்ணுவிற்கு வரும் 20 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்பின்னர் மகா விஷ்ணு புழல் சிறையில் அடைக்கப்பட்டடார்.
இந்நிலையில், மகாவிஷ்ணுவின் பின்னணி குறித்து விசாரிக்க சைதாப்பேட்டை போலீசார் முடிவு செய்தனர். குறிப்பாக இவருக்கு பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? யாருடைய தூண்டுதலின் பேரில் அவர் இவ்வாறு பேசினார்? வேறு எங்கெல்லாம் இதுபோல முன் ஜென்மம் என்ற பெயரில் அவதூறு கருத்துகள் பேசியுள்ளார்? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் 7 நாட்கள் போலீஸ் கஷ்டடி வேண்டும் என கோரி காவல்துறை சார்பில் மனு தாக்கலும் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த மேஜிஸ்ட்ரேட் சுப்பிரமணியம், 3 நாட்கள் போலீஸ் கஷ்டடி கொடுத்து உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து சைதாபேட்டை போலீசார் மாகவிஷ்ணுவை திருப்பூரில் உள்ள அவரது அலுவலகம் அழைத்துச் சென்று விசாரணையில் ஈடுப்பட்டனர். அப்போது அங்கிருந்து 3 ஹார்டு டிஸ்க்கள், 1 பெண் டிரைவ் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர். அதில் மகா விஷ்ணு சொற்பொழிவாற்றிய வீடியோக்களை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், மஹாவிஷ்ணுவின் வங்கி கணக்கு, அறக்கட்டளை கணக்கு, குடும்பத்தார் உட்பட 8 பேரின் வங்கி கணக்குகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
திருப்பூரில் நடைபெற்ற விசாரணை முடிவுக்கு வந்ததை அடுத்து, மகா விஷ்ணுவை போலீஸார் சென்னை அழைத்து வந்துள்ளனர். தொடர் விசாரணைக்குப் பிறகு நாளை மாலை சைதாபேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார் மகா விஷ்ணு.