நிரம்பும் மேட்டூர் அணை.. சீறிப்பாயும் காவிரி.. 12 மாவட்டங்களுக்கு வார்னிங் கொடுத்த தமிழக அரசு

Mettur Dam Water Released For Cauvery Delta District : மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை இன்று சில மணி நேரங்களில் எட்டவுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் முழுவதும் காவிரி டெல்டாவுக்கு திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Jul 29, 2024 - 14:43
Jul 29, 2024 - 14:48
 0
நிரம்பும் மேட்டூர் அணை.. சீறிப்பாயும் காவிரி.. 12 மாவட்டங்களுக்கு வார்னிங் கொடுத்த தமிழக அரசு
Mettur Dam Water Released For Cauvery Delta District

Mettur Dam Water Released For Cauvery Delta District : மேட்டூர் அணை நீர்மட்டம் ஜூலை 18ஆம் தேதி 50 அடியாக இருந்தது.  ஒரே வாரத்தில் மேலும் 50 அடி மளமளவென உயர்ந்து 100 அடியை எட்டியது. இதனையடுத்து நேற்று மாலையில் மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. அணைக்கு ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் வந்துகொண்டுள்ள நிலையில் வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைவாக உள்ளதால் இன்று காலை 117 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.  

 மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு 20,000 கன அடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை இன்று சில மணி நேரங்களில் எட்டவுள்ளது. இதனால் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீர் முழுவதும் காவிரி டெல்டாவுக்கு திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது, அணைக்கு 1,21,934 கன அடி தண்ணீர் வந்துகொண்டுள்ளதால், பாதுகாப்பு கருதி உபரி நீர் முழுவதுமாக காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட வாய்ப்புகள் உள்ளன.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதால் கர்நாடகா தமிழ்நாட்டிற்கு உரிய பங்கான காவிரி நீரை திறந்து விடவில்லை. இதனால் மேட்டூர் அணை நீர்மட்டம் 30 அடியாக சரிந்தது. இதனையடுத்து நடப்பாண்டு குறுவை சாகுபடிக்கு அணையில் இருந்து ஜூன் 12ஆம் தேதி சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடவில்லை.  காவிரி ஒழுங்காற்று குழு ஜூலை 12 முதல் 31 வரை தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறக்க பரிந்துரைத்த நிலையில், அதனை கர்நாடகா அரசு ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் தென்மேற்கு பருவமழையின் தீவிரத்தால் கர்நாடகா மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பி வழிகின்றன. அணைக்கு வரும் உபரி நீர் ஒரு லட்சம் கனஅடிக்கு மேல் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணை கடந்த 20 தினங்களில் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 

இந்த நிலையில் நீர்வளத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணியளவில் 116.360 அடியை எட்டியுள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக அடுத்த ஓரிரு தினங்களுக்குள் 120 அடியை எட்டும் என்றும், எந்த நேரத்திலும் அணையில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்துவிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.இதனையடுத்து காவிரி கரையோர மாவட்டங்களில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி பகுதியில் ஒலிபெருக்கி மூலம் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்கள்   காவிரி ஆற்றில்  துணி துவைக்கவோ, ஆற்றில்  இறங்கி குளிக்கவோ, ஆற்றினை கடக்கவும் கூடாது எனவும் மேலும் கரையோரப் பகுதிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுதல், மீன் பிடித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது. இதனிடையே மேட்டூர் அணை நிரம்பி  அங்கிருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு திருவிழாவை காவிரி டெல்டா மாவட்ட மக்கள் கோலாகலமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow