Chennai Rain: பகலில் வாட்டி வதைத்த வெயில்... இரவில் வெளுத்து வாங்கிய மழை... சில்லுன்னு மாறிய சென்னை!
Chennai Rain Update : சென்னையில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமிருந்த நிலையில், இரவு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. அதிகபட்சமாக மாமல்லபுரத்தில் 72 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. அதேபோல் சென்னையிலும் இரவு முழுவதும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் காணப்படுகிறது. பொதுவாகவே சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும், அதிலும் கோடை காலம் வந்துவிட்டால் சொல்லவே வேண்டாம். மே, ஜூன் மாதங்களில் அவ்வப்போது மழை பெய்த நிலையில், ஜூலை முதல் வாரத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்தது.
கடந்த இரு தினங்களாக சென்னையில் வெயில் தீவிரமடைந்ததால், வாகன ஓட்டிகளும் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். முக்கியமாக நேற்று காலையில் இருந்தே வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் முதல், அலுவலகம் செல்பவர்கள் வரை வெப்பத்தால் அவதிப்பட்டனர். இந்நிலையில் நேற்றிரவு 9 மணி முதல் மழை வெளுத்து வாங்கத் தொடங்கியது. அண்ணா சாலை, மெரினா, திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, தியாராயநகர், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம், அண்ணாநகர் உள்ளிட்ட பல இடங்களிலும் மழை கொட்டித் தீர்த்தது. மேலும், தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்லாவரம், பம்மல், அனகாபுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த காற்றுடன் மழை பெய்தது.
அதேபோல், சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை பெய்தது. இதனால் வெப்ப தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. சில இடங்களில் மழையுடன் காற்றின் வேகமும் அதிகம் இருந்தது குறிப்பிடத்தக்கது. இரவு தொடங்கிய மழை, காலை 7 மணி வரையிலும் தொடர்ந்தது. இந்நிலையில், சென்னை உட்பட 12 மாவட்டங்களில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே மேற்கு திசையின் காற்று வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி வேலூர் மாவட்டத்தில் சத்துவாச்சாரி, காந்திநகர், விருதம்பட்டு, காட்பாடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 2 மணி நேரம் கனமழை பெய்தது. இதன்காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம், மங்கலம்பேட்டை, கருவேப்பிலங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
What's Your Reaction?






