Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை... திமுக, பாமக, நாதக இடையே கடும் போட்டி!

விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதனையடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Jul 13, 2024 - 08:19
Jul 13, 2024 - 10:12
 0
Vikravandi: விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை... திமுக, பாமக, நாதக இடையே கடும் போட்டி!
விக்கிரவாண்டி வாக்கு எண்ணிக்கை

விழுப்புரம்: 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளர் புகழேந்தி வெற்றிப் பெற்றிருந்தார். அவரது மறைவு காரணமாக விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி, கடந்த 10ம் தேதி நடைபெற்ற இத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இந்த இடைத்தேர்தலில் 82.84 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் வேட்பாளர்கள் இடையே தான் பலத்த போட்டி காணப்படுகிறது. 

இந்நிலையில், விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்க, முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. அதனைத் தொடர்ந்து வாக்குப்பதிவு மின்னனு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. 14 மேசைகளில், 20 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதனையொட்டி அனைத்து மேஜைகளிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணிக்கை முழுவதும் கண்காணிக்கப்படுகிறது. 

வாக்கு எண்ணும் மையத்தில் மத்திய தொழிற்பாதுகாப்பு படையினருடன், மாநில போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் அறையை சுற்றிலும் இரும்புக் கம்பிகளால் வேலிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரம், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முகவர்கள் ஆகியோர் வாக்கு எண்ணிக்கையை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 1,195 போலீஸாருடன், 24 CISF வீரர்களும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவையனைத்தையும் மாவட்ட ஆட்சியர் பழனி ஒருங்கிணைத்துள்ளதோடு, வாக்கு எண்ணிக்கை பணிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறார்.  

முன்னதாக விக்கிரவாண்டி இடைத் தேர்தலை அதிமுக புறக்கணிப்பு செய்திருந்தது. இதனால் அக்கட்சியினரின் வாக்குகள் யாருக்கு கிடைத்திருக்கும் என்பதும் அரசியல் வட்டாரத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன் இரு தினங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டிருந்தார். இதற்கு எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயகுமார் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதனால் அதிமுகவினரின் வாக்குகள் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவுக்கு கிடைத்திருக்குமா எனவும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. 

விக்கிரவாண்டி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், காலை 10 மணிக்குள்ளாக முன்னணி நிலவரம் தெரியவரும். அதேபோல் மதியம் 1 அல்லது 2 மணிக்குள் யார் வெற்றி என்பது உறுதியாகிவிடும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow