60 ரூபாய் வழிப்பறி வழக்கு.. 27ஆண்டுகள் தலைமறைவு.. தட்டித்தூக்கிய போலீஸ்

60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு என கூறி வித்தியாசமான முறையில் காவல்துறையினர் கைது செய்தனர்.

Nov 10, 2024 - 20:38
Nov 10, 2024 - 20:43
 0
60 ரூபாய் வழிப்பறி வழக்கு.. 27ஆண்டுகள் தலைமறைவு.. தட்டித்தூக்கிய போலீஸ்
60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபர் கைது

மதுரை மாநகர் அண்ணாநகர் ஜக்காதோப்பு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (55). இவர் 1997ஆம் ஆண்டில் 60ரூபாயை வழிப்பறி செய்ததாக தெப்பக்குளம் காவல்துறையினரால் வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பன்னீர்செல்வம் திடீரென தலைமறைவானார்.

காவல்துறையினர் பல இடங்களில் தேடியபோதும் கண்டுபிடிக்க முடியாத நிலையில், இவர் மீது நீதிமன்றத்தால் பிடிவாரண்ட் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் நிலுவையில் உள்ள வழக்குகளில் தலைமறைவு நபர்களை பிடித்து வழக்கு விசாரணைகளை முடிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள, சிறப்பு தனிப்படை காவல்துறை உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையிலான காவல்துறையினர் பழைய வழக்குகளை ஆய்வு செய்தனர்.

இதன் தொடர்ச்சியாக வழிப்பறி வழக்கில் தேடப்பட்டு வந்த பன்னீர்செல்வம் குறித்து ஜக்காதோப்புக்கு சென்று தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர். அதில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியில் பன்னீர்செல்வம் குடும்பத்துடன் வசிப்பதாக தகவல் தெரியவந்துள்ள்து.

இதனையடுத்து சிவகாசிக்கு விரைந்த தனிப்படை கவால்துறையில் சிவகாசி காவல்துறையினர் மற்றும் தெப்பக்குளம் காவல்துறையினருடன் இணைந்து, மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆய்வு செய்வதாக கூறி பன்னீர்செல்வம் குடும்பத்தினரிடம் பெயர், விபரங்களை கேட்டு உறுதிசெய்தனர்.

இதைதொடர்ந்து சிவகாசியில் ஒயின் ஷாப் ஒன்றில்  பணிபுரிந்துவந்த பன்னீர்செல்வத்தை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். 60 ரூபாய் வழிப்பறி வழக்கில் 27 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த நபரை கைது செய்த தனிப்படை காவல்துறையினருக்கு ஆணையாளர் லோகநாதன் பாராட்டு தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow