”ல்தகாசைஆ இருக்கா?”... ’காதல்’ கடந்து வந்த பாதை!
உலகம் தோன்றியதில் இருந்தே தோன்றியது தான் காதல். அதை கொண்டாடுவதற்கே வருகிறது காதலர் தினம். காதலர்கள் மத்தியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த ’காதலர் தினம்’ பல தசாப்தங்களாக பெற்ற பரிணாம வளர்ச்சியை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

காதல் காலத்தால் அழியாத பல காவியங்கள் உருவாக்கியுள்ளது. அது பூக்களை மட்டுமின்றி பல போர்க்களங்களையும் சந்தித்துள்ளது. இதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, இவ்வளவு ஏன் கண்டம் விட்டு கண்டம் பாய்வதற்கும் காதலால் முடியும். அப்படி சிறப்பு வாய்ந்த காதலை தான் பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினமாக கொண்டாடுகின்றனர்.
இப்படி உலகம் தோன்றியதில் இருந்தே பூர்வீகமாக இங்கு வசிக்கும் காதலுக்கு என்ன வயது என தெரியவில்லை. ஆனால் இந்த நூற்றாண்டுகளில் பல பரிணாமங்களை பார்த்துவிட்டது காதல். பார்த்துக்கொள்ளாமலேயே காதல், பார்த்ததும் வரும் காதல், செல்போனில் ஒலிக்கும் காதல் என காதல் கடந்து வந்த பரிணாமத்தை பற்றிய தொகுப்பே இது..
கலாச்சாரத்தோடு ஒன்றியதே காதல்... குறிப்பாக தமிழர்கள் தொன்மை காலம் தொட்டே காதலுக்கும், கலைக்கும், வீரத்திற்கும் முக்கியத்துவம் அளித்து வந்தவர்கள் தான். அதற்கு தலைவனை பிரிந்திருக்கும் தலைவி பசலை நோயால் தவிப்பதாக கூறப்பட்ட சங்க இலக்கியங்களே சாட்சி.
இதன்பிறகு, கருப்பு-வெள்ளை சினிமா வந்த காலத்தில் தான், காதலும் பரிணாமம் அடையத் தொடங்கியது. அந்த காலத்தில் நடிப்பாகவே இருந்தாலும், ஹீரோ மற்றும் ஹீரோயின் தொட்டு பேசுவதற்கும், காதல் செய்வதற்கும் கடும் எதிர்ப்புகள் இருந்தன. இதனால் தான் பல சீன்களில் இடையில் ரோஜா பூக்களை வைத்து படத்தை எடுத்திருப்பார்கள் டைரக்டர்கள். இப்படி படத்தில் இருந்ததை போல தான், கடிதம் மூலம் பேசிக்கொள்வதும், எப்போதாவது ஒருமுறை கோயில் திருவிழாக்களிலோ, அல்லது சந்தைகளிலோ பார்த்துக்கோள்வதோ என இருந்தனர் காதலர்கள். இப்படி காதலித்தவர்கள் கரம்பிடிப்பதும் மிகவும் அரிதிலும் அரிதாகவே இருந்தது.
இதனையடுத்து 1990களில் தான் காதல் சினிமாக்களில் மட்டுமின்றி இளைஞர்கள் மத்தியில் கொடிக் கட்டி பறக்கத்தொடங்கியது. பிரண்ட்ஸ் படத்தில் கதாநாயகன் விஜய் ’ல்தகசைஆ இருக்கா’ என பெண்களிடம் கேட்பது போல், இளசுகளும் தனக்கு பிடித்தவர்களிடம் வெளிப்படையாக காதலை சொல்லத் தொடங்கினர். ஆனால் காதல் கைகூடிய பிறகு அவர்கள் பேசிக்கொள்ளவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தது. இதனால் கடிதம் மூலமாகவோ அல்லது டெலிபோன் மூலமாகவோ தான் 90ஸ் காலத்தில் காதலை வளர்த்தனர். இதில் காதலியில் ஃபோன் காலுக்காக எஸ்டிடி பூத் பக்கத்திலேயே ‘சங்கீத ஸ்வரங்கள்’ பாடிக்கொண்டு பாய் விரித்து படுத்தவர்களும் உள்ளனர். அப்படி இருந்த காதலர்களுக்கு பெரிதாக காதலர் தினத்தை கொண்டாடிய நினைவெல்லாம் இல்லை. எப்போது தன்னுடைய காதலருடன் பேசுகிறார்களோ அந்நாளையே காதலர் தினமாக நினைத்து வாழ்ந்தனர்.
இதன்பிறகு தான் செல்போனின் ஆதிக்கம் தலை தூக்கத் தொடங்கியது. பெரும்பாலான வீடுகளில் keypad போன்கள் இருந்தது. இதற்கு தோதாக 10 ரூபாயில் இருந்தே recharge scratch cardகளும் கிடைக்க, அதை வைத்து காதலை வீட்டுக்கு தெரியாமல் வளர்த்தனர். இந்த 2k Couples. உலகம் நவீனமயமாக்கலால் பெரிதும் பயனடைந்த இந்த பிரிவினர் சமூக வலைதளங்கள், வாட்ஸ் அப் ஸ்டேடஸ் என அனைத்திலும் காதலை பொழியத் தொடங்கினர். இதனால், காதலர் தினத்துக்கான மவுசும் வெகுவாக வளர்ந்தது. இதனால் தற்போது ரோஜாக்கள், சாக்லேட்டுகள், டெட்டி பியர் என பல பொருட்கள் படுஜோராக விற்பனையாகும் வணிகத்திருவிழாவாக வளர்ந்து நிற்கிறது தற்கால காதலர் தினம். இப்படி இன்ட்ரெஸ்ட்டில் தொடங்கி இன்ஸ்டாவில் வளரும் காதல் பல, கல்யாணத்தில் முடிகிறது, சில பிரேக்கப்பில் முடிந்து, புதிய அத்யாயமாக வேறொரு காதல் மலர்கிறது. இதனால் தான் ”காதல் ஒரு கடலு மாறிடா, அத மறந்துட்டு டம்பிளருக்குள் நீச்சல் ஏனடா?” என்ற பாடல்களை எழுதியுள்ளனர் பாடலாசிரியர்கள்.
இப்படி காலம் காலமாக காதலை மட்டுமல்லாமல் காதலர் தினத்துக்கான சிறப்பையும் வளர்த்துள்ளனர் காதலர்கள். இதனால், காதலர் தினத்தன்று ரோஜாக்களும், சாக்லேட்டுகளும் கொடுக்காவிட்டால் இங்கு சில காதலே பிரிந்துவிடும் அளவிற்கு பரிணாம வளர்ச்சியை பெற்றுள்ளது இந்த காதலர் தினம். இப்படி முக்கியத்துவம் வாய்ந்த இந்த காதலர் தினத்தை கொண்டாடித் தீர்ப்போம்..!
What's Your Reaction?






