வரம்பு மீறிய வாத்தி மாணவர்களுக்கு பாலியல் தொல்லை போக்சோவில் கைதான ஆசிரியர்!
அரசுப் பள்ளி ஆசிரியர், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இச்சம்பவம் குறித்து இப்போது பார்க்கலாம்....

திருப்பூரில் உள்ள மாநகராட்சி பள்ளியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே பள்ளியில் சுந்தர வடிவேல் என்பவர் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் ஏழாம் வகுப்பு பள்ளி மாணவ, மாணவிகளிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல், மாணவர்களிடம் பாலியல் சில்மிஷங்கள் செய்து அதனை வீடியோ எடுத்ததாகவும் தெரிகிறது. ஆசிரியரின் இந்த அத்துமீறல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்க, பாதிக்கப்பட்ட மாணவர்கள் இதுகுறித்து தங்களது பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியான அவர்கள், பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கவே, இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசாரும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரும் பள்ளிக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். 7ம் வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களிடமும் தனித்தனியாக விசாரணை நடத்தினர். அதில், ஆசிரியர் சுந்தர வடிவேலு மீதான குற்றங்கள் உண்மை எனத் தெரியவந்துள்ளது. இதனிடையே சொந்த ஊரான புதுக்கோட்டை சென்றிருந்த ஆசிரியர் சுந்தர வடிவேலுவை, திருப்பூர் தெற்கு மகளிர் காவல் ஆய்வாளர் ஜமுனா தலைமையிலான போலீசார் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் வகுப்பறையில் அத்துமீறி நடந்து கொண்டதோடு, மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சுந்தர வடிவேலு மீது, இரண்டு பிரிவுகளின் கீழ் போக்சோ சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். கிருஷ்ணகிரியை தொடர்ந்து திருப்பூரிலும் வரம்பு மீறிய வாத்தியால், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது. கடுமையான தண்டனைகள் அறிவித்த பின்னரும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?






