தமிழ்நாடு

செல்வப்பெருந்தகைக்கு செக்? டெல்லி தலைமையிடம் புகார்! வெடிக்கும் உட்கட்சி பூசல்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெறுங்கி வரும் வேலையில், தமிழக காங்கிரஸில் புதிய பிரளயம் ஏற்பட்டுள்ளது. டெல்லி தலைமையை சில நிர்வாகிகள் சந்தித்து செல்வப்பெருந்தகைக்கு எதிராக புகார் பட்டியலை வாசித்திருக்கும் சம்பவம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்...

செல்வப்பெருந்தகைக்கு செக்? டெல்லி தலைமையிடம் புகார்! வெடிக்கும் உட்கட்சி பூசல்!
செல்வப்பெருந்தகைக்கு செக்? டெல்லி தலைமையிடம் புகார்! வெடிக்கும் உட்கட்சி பூசல்!

தமிழ்நாட்டில் அடுத்த சட்டமன்ற தேர்தல் வருவதற்கு இன்னும் 1 ஆண்டு, 3 மாதங்களே உள்ள நிலையில், அதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளன. 

தமிழக அரசியல் களத்தில் புதிய வரவாக, தவெக தலைவர் விஜய் எண்ட்ரீ கொடுத்து, ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற ஒரு வெடியைப் போட, அதை வைத்து மற்ற கூட்டணி கட்சிகள் பல அரசியலிலும், தொகுதி பேரங்களையும் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் 25 தொகுதிகளை பெற்ற காங்கிரஸ், தற்போது 40 தொகுதிகளையாவது பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. 

இதற்கு அடி போடும் வகையில் தான், 'திராவிட மாடல் ஆட்சியும், காமராஜர் ஆட்சியும் ஒன்று' என்றெல்லாம் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை பேசிவருவதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். ஆனால் இந்த விவகாரமே காங்கிரஸ் நிர்வாகிகளை செல்வப் பெருந்தகைக்கு எதிராக திருப்பியுள்ளது. 

மாவட்டத் தலைவர்களை மதிப்பதில்லை எனவும், கட்சிக்காக உழைக்கும் மாவட்டத் தலைவர்களுக்குப் பதிலாக புதிய மாவட்டத் தலைவர்கள் தேர்வு செய்யப்படுவதாகவும்  செல்வப்பெருந்தகைக்கு எதிராக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் புகார் பட்டியலை வாசிக்கின்றனர்.  

செல்வப்பெருந்தகை மீது காங்கிரஸ் நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக அதிருப்தியில் இருப்பதாக கூறப்படு வரும் நிலையில், சமீபத்தில் சென்னை சத்யமூர்த்தி பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற தமிழக மேலிட பொறுப்பாளராக இருந்த அஜோய்குமாரிடம், மாநிலத் தலைமையை மாற்றும்படி மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்தார்களாம்.. ஆணால் அந்த கோரிக்கையை பெற்றுச்சென்ற மேலிடப் பொறுப்பாளர் மாற்றப்பட்டு, அப்பொறுப்பில் கிரிஷ் சோடங்கர் நியமிக்கப்பட்டார். 

இதனால் இனியும் பொறுக்க முடியாது என கூறி, மதுரை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் டெல்லி தலைமையிடம் புகார் அளிக்க முடிவெடுத்ததாக கூறப்பட்டது. 

அதன்படி டெல்லி விரைந்த 25 மாவட்ட தலைவர்கள் மற்றும் 2 எம்.எல்.ஏக்கள், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கரை சந்தித்து, ’செல்வப்பெருந்தகையே மாநில தலைவராக நீடித்தால், 2026 தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் காணாமல் போய்விடும் எனவும் இதனால் அவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த புகாரை பெற்ற கிரிஷும், தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரிடம் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டில் காங்கிரஸ் என்றாலே கோஷ்டி மோதலும், வேட்டி கிழிப்பும் வாடிக்கையான ஒன்றுதான் என்றாலும் தற்பொது மாநிலத் தலைவருக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் டெல்லி வரை சென்று போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் காங்கிரஸ் கட்சியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.