காரைக்கால்: புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கோவில்பத்து வருவாய் கிராமத்தில், பிரசித்திப் பெற்ற ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தை, பொலிவுறு நகர திட்டத்திற்காக சுற்றுலாத் துறைக்கும் இந்திய எரிவாயு ஆணையத்திற்கும் வழங்குவதாக, ஒரு போலியான அரசாணை சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த போலி அரசாணையில் தனது கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தி இருப்பதாக, காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இதனிடையே கோயில் நில மோசடியில், அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள் வரை பலரது தலையீடு இருப்பதாக இந்து முன்னணி அமைப்பினர் குற்றம்சாட்டியிருந்தனர். மேலும், உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், புதுச்சேரி ஆளுநர் ஆகியோரிடமும் இந்து முன்னணி அமைப்பினர் புகார் மனு அளித்தனர். இதனைத் தொடர்ந்து முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனிஷ் தலைமையிலான தனிப்படையினர், கோயில் நில விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தில் இடைத் தரகராகச் செயல்பட்ட சிவராமன் என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
அவர் அளித்த தகவலின் பேரில், காரைக்கால் என்.ஆர்.காங்கிரஸ் பிரமுகர் ஜே.சி.பி. ஆனந்த், நில அளவையர் ரேணுகா தேவி உள்பட பலர் மீது வழக்குப் பதிவு செய்தனர். ஜே.சி.பி ஆனந்த் தலைமறைவாகிவிட நிலையில், கைது செய்யப்பட்ட ரேணுகா தேவியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது துணை ஆட்சியர் ஜான்சன் தலைமையில்தான், இந்த கூட்டு சதி நடந்தது தெரியவந்துள்ளது. மேலும் அவரிடம் இருந்து ஆவணங்களையும் செல்போன்களையும் போலீசார் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து, மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சனை அவரது அலுவலகத்தில் வைத்து தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் மகளிர் காவல் நிலையத்தில் உள்ள ரகசிய அறையில், சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக எஸ்எஸ்பி தலைமையிலான ஆய்வாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சப் கலெக்டர் ஜான்சனின் செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார், சைபர் கிரைம் பிரிவில் சமர்ப்பித்து ஆய்வு செய்து வருகின்றனர். கோயில் நில மோசடி விவகாரத்தில் மாவட்ட துணை ஆட்சியரே கூட்டுச் சதியில் ஈடுபட்டு கைதாகி இருப்பது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.