சர்வதேச மகளிர் தினம் 2025: எப்படி உருவானது பெண்கள் தினம்? முக்கிய நோக்கம் இதுதான்!
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி ‘சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்படுகிறது. இந்த தினம் பெண்கள் உரிமைக்காக போராடியதை நினைவுகூரும் நாளாகும்.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8-ஆம் தேதி 'சர்வதேச மகளிர் தினம்' கொண்டாடப்படுகிறது. பெண்களின் உரிமை, சாதனை, பாலின சமத்துவம் மற்றும் அவர்களின் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 'சர்வதேச மகளிர் தினம்' ஒரு கருப்பொருளை மையமாக வைத்து கொண்டாப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு "செயல்களை துரிதப்படுத்து" என முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கருப்பொருளானது பெண்களின் உரிமைகள் மற்றும் அதிகாரமளிப்புகள் குறித்து வேகமாக நடவடிக்கை எடுப்பதாகும்.
மகளிர் தின வரலாறு:
மகளிர் தினமானது கடந்த 1908-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சுமார் 15 ஆயிரம் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக ஒரு மாபெரும் பேரணியை நடத்தியதில் இருந்து தொடங்கியது. வேலை நேரத்தைக் குறைத்தல், செய்த வேலைக்கு ஏற்ற ஊதியம், வாக்குரிமை ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி இந்த பேரணி நடைபெற்றது.
இந்த போராட்டம் நடைபெற்ற ஒரு வருடத்திற்கு பிறகு அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சி முதல் தேசிய மகளிர் தினத்தை கொண்டாடுவதாக அறிவித்தது மற்றும் 1909-இல் அமெரிக்காவில் முதல் 'தேசிய மகளிர் தினம்' கொண்டாடப்பட்டது.
கடந்த 1910-ஆம் ஆண்டு ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் நடைபெற்ற உழைக்கும் பெண்களுக்கான சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மன் பெண் கிளாரா ஜெட்கின், சர்வதேச அளவில் மகளிர் தினத்தை கொண்டாடுவதற்கான முன்மொழிவை முன்வைத்தார்.
இதற்கு அங்கிருந்த அனைத்து பெண்களும் ஆதரவு அளித்தனர். அதன்பிறகு 1911-ஆம் ஆண்டு ஆஸ்திரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் முதல் முறையாக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. தொடர்ந்து, 1917-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி ரஷ்யாவில் பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் மகளிர் தின பேரணிகளுக்கான உலகளாவிய அளவுகோலாக மாறியது.
இதையடுத்து 1975-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி ’சர்வதேச பெண்கள் தினம்’ கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இதன் பின்னர், 1977-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை மார்ச் 8-ஆம் தேதியை 'பெண்கள் உரிமைகள் தினமாக' கொண்டாட அறிவித்தது. அன்று முதல் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி ’சர்வதேச மகளிர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
பெண்களின் சாதனைகள் மற்றும் பங்களிப்புகளை நினைவுகூர்வதும், பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்த விழிப்புணர்வை சமுதாயத்தில் அதிகரிப்பதுமே இந்த தினத்தை கொண்டாடுவதற்கான முக்கிய நோக்கமாகும். இந்த நாள் கொண்டாட்டத்திற்காக மட்டுமல்ல பெண்களின் உரிமைகள் மற்றும் சாதனைகளை அங்கீகரித்து அவர்களுக்கு எதிரான பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு முக்கியமான முன்முயற்சியாகும்.
What's Your Reaction?






